ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் சிறந்த கேப்டன்? கம்பீர் செய்த சூழ்ச்சி.. ரிக்கி பாண்டிங்கின் அந்த அனுபவம்!
சென்னை: ஐபிஎல் தொடரில் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரை விடவும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டனாக உருவாகி இருக்கிறார். ஒவ்வொரு வீரரிடமும் என்ன திறமை இருக்கிறது, அதனை எப்படி எந்த சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பதே அவரின் தனித்துவமான திறமையாக அமைந்துள்ளது. அதேபோல் தோல்விகளின் போது கேப்டனாக முன் நின்று ஸ்ரேயாஸ் ஐயர் பழியை தன் மீது போட்டுக் கொள்வது ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வருகிறது.
18வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சீசனுக்கு முன்பாக பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கும் வாங்கி ஆச்சரியம் கொடுத்தது. முழுக்க முழுக்க புதிய அணியை ரிக்கி பாண்டிங் கட்டமைத்து, அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தலைமை தாங்க வைத்திருக்கிறார்.

ட்விஸ்ட் வைத்த ரிக்கி பாண்டிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சர்ப்ரைஸ் மெகா ஏலத்திலேயே தொடங்கிவிட்டது. ஏனென்றால் ரிக்கி பாண்டிங் நிச்சயமாக ரிஷப் பண்ட்-ஐ வாங்க எந்த எல்லைக்கும் செல்வார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் பஞ்சாப் அணியும், ரிக்கி பாண்டிங்கும் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தனர். அப்போது இம்முறை பஞ்சாப் வேறு மாதிரி வந்திருக்கிறது என்றே ரசிகர்கள் புரிந்து கொள்ள தவறினர்.
கம்பீருக்கு கிடைத்த பாராட்டு
அதேபோல் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கேகேஆர் அணி வென்றதற்கு கம்பீர்-க்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதில் பாதி கூட கிடைக்கவில்லை. அதே கம்பீர் 2 ஆண்டுகளாக லக்னோ அணிக்கு ஆலோசகராக இருந்த போது ஏன் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று யாரும் கேட்கவே இல்லை.
ஸ்ரேயாஸ் ஐயரின் செயல்பாடு
ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றாலும், கேகேஆர் அணிக்கு தேவையான நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அவரின் பேட்டிங் வரிசையை நிரந்தரமாக வைத்து கொள்ளாமல், மாற்றி கொண்டே இருந்தார். பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்காத போதும் கூட, கொஞ்சம் கூட தனது பேட்டிங் பற்றி ஸ்ரேயாஸ் ஐயர் கவலைப்படவில்லை.
கேப்டன்சி
அதன் தொடர்ச்சியே குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதத்தை பற்றி கவலைப்படாமல் ஷஷாங்க் சிங்கை அதிரடியாக விளையாட வைத்தது. அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா ஏ அணியில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருக்கிறது. அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் ஒவ்வொரு வீரரின் திறமையையும் அறிந்து, அதற்கான சூழலில் பயன்படுத்தும் திறமையை வளர்த்து கொண்டவர்.
ஸ்ட்ரீட் ஸ்மார்ட் கேப்டன்
ஸ்ட்ரீட் ஸ்மார்ட் என்று சொல்லப்படும் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதே ஸ்ரேயாஸ் ஐயரின் பலமாக இருக்கிறது. அதன் மூலமாகவே கேகேஆர் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்லும் அணியாக மாற்றி காட்டி இருக்கிறார். ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோரை விடவும் தோல்விக்கான காரணத்தை எளிதாக புரிந்து அதற்கான செயல் திட்டங்களையும் பயிற்சியாளர்களுடன் உருவாக்குபவர்.
ரிக்கி பாண்டிங் தேர்வு செய்ய காரணம்
இதனை டெல்லி அணியில் இருந்த போதே ஸ்ரேயாஸ் ஐயர் செய்திருப்பதால் தான், இம்முறை பஞ்சாப் அணிக்கு வந்த பின்னரும் ரிக்கி பாண்டிங் அவரை விடாப்பிடியாக வாங்கியுள்ளார். இதனால் 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதோடு, கோப்பையை வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications