முதல் முறையாக உலகக் கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி! ரசிகர்கள் கொண்டாட்டம்!
மும்பை: மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி உலகக்கோப்பை வென்றது. முதல் உலககோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது.

மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடி 17.4 ஓவர்களில் பிரிந்தது. மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். ஷபாலி - ஜெமிமா கூட்டணியும் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா 87 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார்.
சிறிது நேரத்திலேயே ஜெமிமா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய தீப்தி சர்மா சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். இதனிடையே ஹர்மன்ப்ரீத் 20 ரன்களிலும், அமன்ஜோத் 12 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதி கட்டத்தில் தீப்தி உடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் அணியின் ரன் வேகத்தை சீராக உயர்த்தினார். ரிச்சா கோஷ் 34 ரன்களில் 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் அடித்தது. தீப்தி சர்மா 58 ரன்களில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் நங்கூரம் போல நிலைத்து நின்று அதிரடி காட்டினர். மறுமுனையில் உள்ள வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால், இந்திய அணியின் கை ஆட்டத்தில் ஓங்கியது. கேப்டன் லாரா வால்வார்ட் 101 ரன்களில் அவுட் ஆனார். இதனால், ஆட்டம் முழுவதும் இந்திய அணியின் பக்கம் திரும்பியது.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து 58 ரன்கள் எடுத்த தீப்தி சர்மா, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் முறையாக உலககோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இந்திய மகளிர் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணி ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை வென்றதால், மைதானத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications