Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண மீனவச் சமூகம்

Subscribe to Oneindia Tamil
Sri Lankan fishermen facing problems due to economic crisis
BBC
Sri Lankan fishermen facing problems due to economic crisis

இலங்கையின் வட பகுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரது நிலை இதுதான். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியும் எரிபொருள் தட்டுப்பாடும் யாழ்ப்பாணத்தின் மீன் பிடித் தொழிலையே முடக்கியிருக்கிறது.

இலங்கை வடக்கு மாகாணத்தின் பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள்.

ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஒட்டி எழுந்திருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு இந்தத் தொழிலுக்கு மிகப் பெரிய சவாலாக எழுந்து நிற்கிறது.

யாழ்ப்பாணத்தின் குரு நகர் கடற்கரைப் பகுதியில் படகுகளுக்கு மண்ணெண்ணை வாங்க சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கிறார்கள் மீனவர்கள். அவர்களது நாளின் பெரும்பகுதி மண்ணெண்ணைய்க்காக காத்திருப்பதிலேயே போய்விடுகிறது.

"எங்கிட்ட ரெண்டு போட் இருக்கு. ஆறு தொழிலாளி போவார். தொழில் ஓடினால்தான் அவங்களையும் பார்க்கலாம். இங்க எண்ணைக்கு வந்தா பிரச்னை. எங்க போனாலும் கேன்ல தரவே மாட்டாங்க. நாங்க ஆட்டோ பிடிச்சுக் கொண்டு வந்தா, அல்லபிட்டியிலிருந்து ஆட்டோ பிடிச்சுக்கொண்டு வந்தா ஆயிரம் ரூபாய்... டீசல் கிடைக்காட்டியும் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்துட்டு தொழிலாளிக்கும் கொடுக்க இயலுமா?" என்கிறார் மண்ணெண்ணைக்காகக் காத்திருக்கும் அல்லபிட்டியைச் சேர்ந்த மீனவரான தேவராஜா.

இங்கு சிறு சிறு படகு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். தங்கள் படகுகளில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி வரும் வருவாயைப் பிரித்துக்கொள்கிறார்கள். இப்போது எரிபொருள் விலையேற்றத்தாலும் மீன்களை வாங்க ஆட்கள் குறைவாக வருவதாலும் இதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் - மீன் பிடித் தொழில்
BBC
யாழ்ப்பாணம் - மீன் பிடித் தொழில்

"நாங்கள் சராசரியாக கடலுக்குப் போய்வந்தால் முப்பதாயிரம் ரூபாய்க்கு வித்தாத்தான் எரிபொருள் செலவை கழித்துவிட்டு மீதியை தொழிலாளரும் முதலாளியும் பகிர்ந்துகொள்ள முடியும். மீன் விலை குறைந்திருப்பதால் இப்போது 25,000தான் கிடைக்கிறது. இதில் 15,000 எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காகப் போய்விடும். மீதமுள்ள பத்தாயிரத்தில் தொழிலாளர்களுக்கு ஆறாயிரம் போய்விடும். மீதமுள்ள 4 ஆயிரத்தை வைத்து என்ன செய்வது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் இந்தத் தொழிலையே விட்டுவிட வேண்டியதுதான்" என்கிறார் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா.

யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான மீன் பிடித் தொழில் நடந்து வருகிறது. காக்கைத் தீவு பகுதியில் சிறகு வலை மூலம் மீன் பிடிக்கும் தொழில் மிகப் பரவலாக இருக்கிறது. ஆழமில்லாத கடல் பகுதியில் நீண்ட கம்பிகளை ஊன்றி, வலைகளை இணைத்து, மீன் பிடிக்கும் இந்த முறைக்கு ஒரு தடவைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. விரிக்கப்பட்ட வலை சுமார் 15 நாட்களுக்குக் கடலிலேயே இருக்கும். மீனவர்கள் தினமும் சென்று அந்த வலையைக் கண்காணித்து வர வேண்டும்.

ஆனால், தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் கடலுக்குச் சென்று பார்க்க முடிகிறது. இதற்கு நடுவில் வேறு படகுகள் வலையை அறுத்து, மீன்கள் வெளியேறிவிட்டாலோ, கம்பங்கள் சாய்ந்து மீன்கள் வெளியேறிவிட்டாலோ பெரும் இழப்புதான்.

இவ்வளவு சிரமத்திற்கு நடுவில் மீன் பிடித்து வந்தாலும் இத்தனை நாட்களாக பிடித்துவந்த மீனுக்கு நல்ல விலையாவது கிடைத்து வந்தது. ஆனால், இப்போது வாகனங்களுக்கான டீசல் தட்டுப்பாட்டின் காரணமாக, கொள்முதல் செய்யும் வாகனங்களே மிகக் குறைவாக வருகின்றன. இதனால், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை.

"முன்பெல்லாம் நாங்கள் மீன் கொண்டு வந்தோமென்றால் கூலர் (குளிர்பதன வசதியுடன் கூடிய சரக்கு வாகனம்) வந்து நிற்கும். அவர்கள் நல்ல விலைக்கு எடுப்பார்கள். இப்போது மீனைக் கொண்டு வந்தால் கூலர்கள் பெரிதாக வருவதில்லை. ஐசும் கிடைப்பில்லை. நாங்க காலம்பர கொண்டு வரும் மீனைக் குறிப்பிட்ட நேரத்திற்குக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக ஏழு மணிக்கு முன்பாக வரும் மீனைத்தான் விற்க முடியும். பிந்தி வரும் மீன்களை பாதி விலைக்குத்தான் கேட்பார்கள். ஐநூறு ரூபாய்க்கு விற்கக்கூடிய மீனை 200 - 300 ரூபாய்க்குத்தான் விற்க முடிகிறது. இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது." என்கிறார் காக்கைத் தீவைச் சேர்ந்த மீனவரான சிவா.

யாழ்ப்பாணம் - மீன் பிடித் தொழில்
BBC
யாழ்ப்பாணம் - மீன் பிடித் தொழில்

யாழ்ப்பாணத்தின் ஊர்காவற்துறை பிரதேசத்தில் நண்டுகளைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலும் பரவலாக நடக்கிறது. ஆனால், இதற்கு முக்கியத் தேவையாக ஐஸ் கட்டி இருக்கிறது. ஆனால், இதனை உருவாக்க மின்சாரமோ, டீசலோ இல்லாததால், ஏப்ரல் மாதத் துவக்கத்திலிருந்து இந்த நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் முடப்பட்டிருக்கின்றன.

இந்த நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பது மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

"முன்பு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்த நண்டை இன்றைக்கு வெறும் 700 ரூபாய்க்குத்தான் கொள்முதல் செய்கிறார்கள். 700 வாங்குவதற்குக்கூட சில நேரத்தில் ஆட்கள் இல்லாமல் இருக்கு. கொழும்புக்குக் கொண்டு போய் விற்கலாம் என்றால், வாகனத்திற்கு டீஸல் இல்லை. அப்படியானால் நாங்கள் படிக்கும் நண்டை என்னதான் செய்வது? அந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால தீவகத்தில பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் யாழ்ப்பாண கடற்தொழிலாளர்களின் கூட்டுறவு சங்க சமாஜத்தின் தலைவரான அன்னலிங்கம் அன்னராசா.

ஊர் காவற்துறை பிரதேசத்தில் செயல்படும் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பல தருணங்களில் இந்தப் பெண்களின் வருவாயிலேயே குடும்பம் நடக்கிறது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 80 முதல் 100 பேர் வேலை பார்க்கிறார்கள். ஆனால், இப்போது தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதால் திகைத்துப் போயிருக்கிறார்கள் இவர்கள்.

வேக வைத்த நண்டின் தசைப் பகுதியைப் பிரித்தெடுத்து அவற்றை உறையச் செய்து, வேறொரு புராசஸிங் மையத்திற்கு அனுப்புவது இவர்களது வேலை. இவர்கள் ஒவ்வொரு நாளும் நண்டையும் இறாலையும் எந்த அளவுக்கு பிரித்தெடுக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களால் வருவாய் ஈட்ட முடியும். ஒரு மாதத்திற்கு சராசரியாக 40,000 இலங்கை ரூபாயிலிருந்து 60,000 ரூபாய்வரை சம்பாதிக்க முடியும்.

"இந்தத் தொழிற்சாலைகள் இயங்க ஒரு வாரத்திற்கு 200 லிட்டர் டீசல் தேவை. இந்த டீசலைக் கேட்டு மாவட்டச் செயலகத்திற்கும் பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனத்திற்கும் மனுக்களைக் கொடுத்தும் ஒரு பயனும் இல்லை" என்கிறார் அன்னராசா.

ஊர் காவற்துறை பிரதேசத்தில் செயல்படும் நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். பல தருணங்களில் இந்தப் பெண்களின் வருவாயிலேயே குடும்பம் நடக்கிறது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் 80 முதல் 100 பேர் வேலை பார்க்கிறார்கள். ஆனால், இப்போது தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதால் திகைத்துப் போயிருக்கிறார்கள் இவர்கள்.

"என்னுடைய வீட்டில் 3 பிள்ளைகள். நான் ஒருத்திதான் சம்பாதித்து வந்தேன். இப்போது தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை." என்கிறார் இம்மாதிரி ஒரு நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த கண்ணன் சத்தியவதி.

தம்படி பகுதியைச் சேர்ந்த சுவிதாவின் கணவர் மீனவர். சுவிதா இந்த நண்டு தொழிற்சாலையில் வேலை பார்த்துவந்தார். ஆனால், இப்போது எரிபொருள் பிரச்னையால் கணவரும் மீன்பிடிக்கச் செல்ல இயலவில்லை. சுவிதாவும் வேலை இழந்திருக்கிறார்.

"40,000 சம்பளம் எடுக்குற இடத்தில இப்போ 10,000 சம்பளம் எடுக்குற மாதிரிகூட இப்ப வேலை இல்ல. இப்ப சாமான் விக்கிற விலைவாசியில சாப்பாட்டுக்கு எடுக்கிறதா இல்லை பிள்ளைகளுக்கு சேமிக்கிறதா?" என்கிறார் சுவிதா.

எரிபொருள் விலையேற்றம், தட்டுப்பாடு, பிடித்த மீன்களை நல்ல விலைக்கு சந்தைப்படுத்த வழியில்லாதது, உணவுப் பொருட்களின் விலையேற்றம், வருவாய் இழப்பு என பல முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது வடபகுதியின் மீனவ சமூகம்.

https://www.youtube.com/watch?v=Ul7vtou3CUI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+