இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல்
யாழ்ப்பாணம்: இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனாலும் இன்னமும் இலங்கையில் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதனால் இலங்கையை விட்டு அகதிகளாக ஈழத் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து பல நூறு தமிழர்கள் கொத்து கொத்தாக ஆபத்தான படகு, கப்பல் பயணங்கள் மூலமாக ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் தஞ்சமடைய செல்கின்றனர். அப்படி தஞ்சமடைய ஆபத்தான கடல்வழிப் பாதையில் செல்லும் போது மரணித்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்.
கடந்த நவம்பர் மாதம், இலங்கையில் இருந்து 300க்கும் மேற்பட்ட தமிழர் உள்ளிட்டோரை அகதிகளாக ஏற்றிக் கொண்டு படகு ஒன்று கனடா நோக்கி சென்றது. ஆனால் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் பாறையில் மோதி படகு பழுதடைந்தது. இதனால் 300க்கும் மேற்பட்ட தமிழர் உள்ளிட்டோர் நடுக்கடலில் மூழ்கும் நிலையில் பேராபத்தில் சிக்கினர். அப்போது ஜப்பானிய கடற்படை அனைவரையும் விரைந்து சென்று மீட்டிருந்தது. இவர்களில் பலரை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் யாழ்ப்பாணம் அருகே மிகப் பெரிய படகு ஒன்றில் நூற்றுக்கணக்கானவர்களுடனான படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து சில கடல் மைல் தொலைவில் இந்த படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றி வளைத்தனர்.
நடுக்கடலில் தத்தளித்த அந்த படகில் மொத்தம் 104 பேர் இருந்தனர். அப்படகில் இருந்த பலர் பசியும் பட்டினியுமாக எலும்பும் தோலுமாய் உருகிப் போயிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரும்பான்மையானோர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மியான்மர் நாட்டில் இருந்து இந்தோனேசியாவுக்கு அகதியாக செல்ல 2 படகுகளில் 300க்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர்.
ஆனால் நடுக்கடலில் படகு திசைமாறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளது. மற்றொரு படகு நடுக்கடலில் பழுதடைந்து அப்படியே 170 பேருடன் மூழ்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மியான்மரை விட்டு அகதிகளாக வெளியேறிய அனைவரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் எனவும் கூறப்படுகிறது.
தற்போது நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்ட 104 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் 104 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பசி பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன பலருக்கு தோலில் ஒவ்வாமை நோயும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், இந்தோனேசியா நோக்கி சென்றவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் எப்படி நுழைய முடியும்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்கின்றனர் இலங்கை அதிகாரிகள்.
மியான்மரில் ராணுவ ஒடுக்குமுறைகளை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். மியான்மர் ராணுவ ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அகதிகளாக அடைக்கலம் கோரி செல்கின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் பிரச்சனை மிக முக்கியமானதாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications