தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்: யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகம்
யாழ்ப்பாணம்: தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகிக்கப்பட்டன.
இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார்.

இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி உள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஆளும் திமுக அரசும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. முதல் கட்டமாக ரூ 45 கோடி மதிப்பில் 9000 டன் அரிசி, 200 டன் ஆவின் பால்பவுடர் , 24 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஆகியவற்றுடன் டான் பின்-99 என்ற சரக்குக் கப்பல் அண்மையில் கொழும்பு சென்றடைந்தது. முன்னதாக சென்னை துறைமுகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இக்கப்பலை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
இலங்கையை சென்றடைந்த இந்த நிவாரணப் பொருட்களின் ஒருபகுதி ஈழத் தமிழருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வடக்கே உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தம் 20,000 குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணங்கள் வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வந்த நிவாரண மூட்டைகள் வந்திறங்கின. இது பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் நிவாரண மூட்டைகளை யாழ் மாவட்ட ஆட்சியர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3,964 குடும்பங்களுக்கு பால்மா பாக்கெட்டுகளும் ஒதுக்கப்பட்டன. அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சய பாத்திர உதவிகள்" எனும் தலைப்பில் இந்த உதவித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஜெ. ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு குறித்த உதவித்திட்டத்தினை வழங்கினார்.












Click it and Unblock the Notifications