இன்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரைச் சந்திக்கிறது தமிழக மீனவர் குழு...
கொழும்பு: நேற்று கொழும்பில் நடைபெற்ற தமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையேயான 2ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று இலங்கையில் உள்ள இந்தியத் தூதரைச் சந்திக்கிறது தமிழக மீனவர் குழு.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவதும், கைது செய்யப் படுவதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் வலைகளை கிழித்தெறிவது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் தொடர்கிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இந்தியா- இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால், சிலப்பல காரணங்களால் அது இரு முறை தள்ளிப்போனது.
இந்நிலையில், நேற்று இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 17 மீனவ பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என இந்தியா சார்பில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள் என 30 பேர் கலந்து கொண்டனர்.
ஆனால், பேச்சுவார்த்தைவில் உடன்பாடு எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இலங்கையில் உள்ள இந்தியத் தூதரை இன்று சந்திக்க இருக்கிறார்கள் தமிழக மீனவர்கள் குழு. அப்போது இது தொடர்பாக அவரிடம் மனு ஒன்றை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், இலங்கைச் சிறையில் வாழும் தமிழக மீனவர்களைச் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications