ஐநா தீர்மானம் இலங்கையை ஒன்றும் செய்யாது.. அதுபற்றி கவலையே இல்லை- ராஜபக்சே
கொழும்பு: ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் எங்களை ஒன்றும் செய்யாது. எனவே அதைப் பற்றி எனக்கு கவலை கிடையாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
தொலைக்காட்சியில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ராஜபக்சேயிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜபக்சே, "தேர்தல் ரீதியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாத எதிர்க்கட்சிகள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் இதைப்போன்ற பொய் கதைகளை சர்வதேச சமுதாயத்திற்கு கொண்டு சென்று வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்," என்று குற்றம் சாட்டினார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர், "நான்கு நாட்கள் இங்கு முகாமிட்டிருந்து தவறான தகவல்களை கொண்டு சென்று, அந்த தவறான தகவலின் அடிப்படையில் அவர்கள் முன்வைத்திருக்கும் அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை" என்றார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்சே, "கியூபா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராகவும், இதைப்போன்ற தீர்மானங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன.
இலங்கை மட்டுமல்ல, மேலும் சில நாடுகளும் இதைப்போன்ற தீர்மானங்களை சந்தித்துள்ளன. அந்த தீர்மானங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. எனவே அதைப்பற்றி நாம் கவலைப்பட ஏதுமில்லை. எனக்கு அதைப்பற்றி கவலையே கிடையாது," என்றார்.












Click it and Unblock the Notifications