ஓடி ஓடி.. இந்திய வீரர்களின் ஷூவை துடைத்து.. மைதானத்தில் நெகிழ்ச்சி சம்பவம்.. இவர் மட்டும் இல்லைன்னா
சிட்னி: நேற்று வங்கதேசத்திற்கு எதிராக நடந்த சூப்பர் 12 டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. மீண்டும் கடைசி பால் வரை சென்ற ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றிபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்ட படியே அக்சர் பட்டேல் களமிறங்கி உள்ளார். தீபக் ஹூடா நீக்கப்பட்டார். ஆனால் தினேஷ் கார்த்திக், கே எல் ராகுல் இருவரும் நீக்கப்படவில்லை.
இதன் பலனாக நேற்று நடந்த ஆட்டத்தில் கே. எல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார்.

அசத்தல் ஆட்டம்
இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியதால் முதல் பாலில் இருந்தே அதிரடி காட்டியது. ரோஹித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆனால் இன்னொரு பக்கம் கே எல் ராகுல் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி அடித்தார். கடந்த 10 போட்டிகளுக்கும் மேலாக சரியாக ஆடாமல் சொதப்பி வந்த ராகுல் இன்று அசத்தலாக ஆடினார். முக்கியமாக 4 சிக்ஸர் அடித்தார். இன்னொரு பக்கம் சூர்யா குமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்கள் எடுத்து கலக்கினார்.

கோலி
அதேபோல் கோலி நிதானமாகவும், அவ்வப்போது அடித்தும் ஆடி வந்தார். இந்த தொடரில் இதன் மூலம் 3 வது அரை சதம் அடித்தார். நேற்று 44 பந்தில் 64 ரன்கள் இவர் எடுத்தார். அதன்பின் இறங்கிய வங்கதேசம் அணியில் லிட்டோன் தாஸ் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். 27 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரி, 3 சிக்ஸ் அடக்கம். இவர் ஆடும் வரை இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

விக்கெட்
ஆனால் இந்த போட்டியில் நேற்று பாதியில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 16 ஓவராக குறைக்கப்பட்டது. இதையடுத்து லீட்டோன் ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வங்கதேச வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். மழைக்கு பின் இந்திய அணி பீல்டிங் களமிறங்கிய போது மைதானம் ஈரமாக இருந்தது. இந்த ஈரம் காரணமாக மைதானத்தில் ஓடுவது கஷ்டமாக இருந்தது. அதேபோல் பந்தும் கிரிப் இன்றி இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.

மழை
முக்கியமாக இந்திய வீரர்களின் ஷூக்கள் ஈரமானது. இதனால் அவர்கள் வேகமாக ஓடுவதும் கஷ்டமாக இருந்தது. இந்த நிலையில்தான் இளைஞர் ஒருவர் ஓடி ஓடி சென்று இந்திய வீரர்களின் ஷூக்களை துடைத்தார். கையில் ஒரு பெரிய பிரஷை வைத்து இந்திய வீரர்களின் ஷூக்களை அவர் மாறி மாறி துடைத்தார். இவர் இப்படி செய்த விதம் அங்கு இருந்த ரசிகர்களை கவர்ந்தது. இவர் ஷூ துடைத்த காரணத்தால் அதில் ஈரம் இல்லாமல் இருந்தது.

தண்ணீர்
இதனால் இந்திய வீரரக்ள் மைதானத்தில் எளிதாக ஓட முடிந்தது. இவர் யார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். இவர் பெயர் ரகு என்கிற ரகுவேந்திரா. இவர் இந்திய அணியில் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். அதாவது பந்துகளை த்ரோ செய்து பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் வந்த பின்பே இந்திய வீரர்கள் பவுன்சர்களை சிறப்பாக ஆட தொடங்கினார்கள்.

யார் இவர்?
முக்கியமாக ஆஸ்திரேலியா போன்ற பிட்சில் பவுன்சர்களை விளையாட இவர் முக்கிய காரணமாக இருந்தார். இவர் கொடுத்த த்ரோ பயிற்சி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருந்தது. இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இவர் முக்கியமான உறுப்பினராக திகழ்ந்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியில் இவர் உறுப்பினராக இருக்கிறார்.இந்த நிலையில்தான் நேற்று இவரின் செயல் அதிகம் கவனம் பெற்றது.