தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வேல்முருகன் என்பவரின் பைபர் படகில் மொத்தம் 6 பேர் கடந்த 21-ந் தேதி கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு மிக அருகில் அதிகாலை நேரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு நுழைந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் மீனவர்களின் படகில் ஏறிய இலங்கை கடற்படையினர் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தடிமனமான இரும்பு கம்பிகளால் தமிழ்நாட்டு மீனவர்களை சரமாரியாக இலங்கை கடற்படையினர் தாக்கினர். இந்த கொடூரமான தாக்குதலில் மீனவர்கள் அலறித் துடித்தனர். இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளையும் மீன்களையும் பறித்துக் கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்தனர்.
இதனையடுத்து படுகாயங்களுடன் கரைக்கு திரும்பிய மீனவர்கள், தரங்கம்பாடி மாவட்ட தலைமை கிராம மீனவ பஞ்சாயத்தாரிடம் முறையிட்டனர். இது தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் தரங்கம்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மயிலாடுதுறை மருத்துவமனையில் மீனவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மீனவர்களின் முதுகு பகுதியில் தடித்தடியாக கடும் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு மீனவரின் முதுகு எலும்பு முறிந்துள்ளது.
மேலும் வேதாரண்யம் மீன்வளத்துறையினர், கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மீனவர்களை நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீனவர்களின் புகாரின் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு குழும நாகை கூடுதல் கண்காணிப்பாளர் சங்கர், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதர், மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார மற்றும் கடலோர போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய கடலோர காவல் குழும போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் மகாபாரதி கூறினார். இதனடிப்படையில் தற்போது இலங்கை கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இத்தாக்குதலைக் கண்டித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில், அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறுகிறது. பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றனர். இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது.நமது மீனவர்கள் வாழ்வாதராத்துக்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர். மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதர வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications