இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகும்: வானிலை ஆய்வுமையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க வாய்ப்பில்லைஎன்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதேசமயம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சேலம் மாவட்டம் சங்ககிரியில் 10 செ.மீ., தருமபுரியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை எப்போது தொடங்கும்?
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலமாகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டால், தென்மேற்கு பருவமழை விலகிவிட்டதாக அறிவிக்கப்படும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரும் 15 முதல் 30-ம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை
தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய ஆகும். அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் பெய்கின்ற மழை வடகிழக்கு பருவமழை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் வடகிழக்கு பருவமழை சராசரியாக அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்கு மேல்தான் தொடங்கும். அது தொடங்கும்போதுதான் தென்மேற்கு பருவமழை விலகிவிட்டதாக கருதப்படும். அதுவரை தென்மேற்கு பருவமழை இருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும்.

வழக்கமான மழை அளவு
வழக்கமாக தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் 32 செ.மீ. பெய்ய வேண்டும். ஆனால் இந்த வருடம் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது சராசரியாக பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பில்லை. இலங்கை அருகே மேலடுக்கில் சுழற்சி இருந்தது. அது நகர்ந்து லட்சத்தீவுக்கு சென்று உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வுமைய அதிகாரி ரமணன் கூறியுள்ளார்.

இடி மின்னலுடன் மழை
இதனிடையே மதுரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேகங்கள் திரண்டு பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை தூறியது. பின்னர் இரவு 7 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை 8.30 மணி வரை பெய்தது. மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக் கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெருக்கெடுத்த வெள்ளநீர்
உசிலம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதியில் சாரல் மழை பெய்தது. திருமங்கலத்தில் இரவு 7 மணியளவில் பலத்த காற்று, இடிமின்னலுடன் தொடங்கிய மழை 8 மணி வரை பெய்தது. இதனால் திருமங்கலம் பகுதியில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நின்ற பின்பும் தொடர்ந்து இடி, மின்னல் இடித்தபடியே இருந்தது. பேரையூர் பகுதியில் சுமார் 20 நிமிடம் இடி மின்னலுடன் மழை பெய்தது.

2 மணிநேரம் பெய்த மழை
மேலூரில் இரவு 9 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மேலூர், தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி, கீழவளவு, வெள்ளளூர், உறங்கான்பட்டி, கோட்டநத்தான்பட்டி, அம்பலக்காரன்பட்டி, கொட்டகுடி, திருவாதவூர், நரசிங்கம்பட்டி, எட்டி மங்களம், கிடாரிபட்டி மற்றும் சுற்று பகுதிகளில் சுமார் 40 நிமிடங்கள் மழை பெய்தது.
இதே போல் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கண்மாய்களில் நீர் மட்டம் உயர்ந்தது.












Click it and Unblock the Notifications