விருத்தாசலம் ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து! 10 மாணவர்கள் காயம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 10 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேனை அங்கிருந்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக விபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.
கடலூர் மாவட்டம் விருத்தாலம் அருகே பூவனூரில் ரயில் தண்டவாளத்தை ஒரு வேன் கடக்க முயன்றது. அந்த வேன் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனமாகும். வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களை வேனில் ஏற்றிக் கொண்டு அதன் டிரைவர் வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது பூவனூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது நிலைத்தடுமாறிய வேன், திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
வேனில் இருந்த மாணவர்கள் "காப்பாற்றுங்க, காப்பாற்றுங்க" என கதறினர். இதையடுத்து பொதுமக்கள் அந்த இடத்திற்கு ஓடி வந்து கவிழ்ந்து கிடந்த வேனை தூக்கி நிறுத்தி அதில் இருந்த மாணவர்களை காப்பாற்றினர்.
பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேன் கவிழ்ந்து விபத்து நடந்த செய்தியை அறிந்த பிள்ளைகளின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த போது நல்ல வேளையாக அங்கு ரயில் வராமல் இருந்தது. கடந்த மாதம் கடலூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன், மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications