பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் – 100 சிறைக்கைதிகள் தேர்ச்சி பெற்று சாதனை
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.இத்தேர்வை எழுதிய சிறைக்கைதிகளில் 100 பேர் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தமிழக சிறைகளில், கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை படைத்தது போல, 10 ஆவது வகுப்பு தேர்விலும் வெற்றி வாகை சூடினார்கள். சிறைகைதிகளுக்கு சென்னை புழல் மற்றும் திருச்சி சிறைகள் தேர்வு மையமாக இருந்தன.
113 கைதிகள் 10 ஆவது வகுப்பு தேர்வு எழுதினார்கள். நேற்று தேர்வு முடிவு வெளியான போது, 100 கைதிகள் வெற்றிவாகை சூடினார்கள். 13 கைதிகள் தோல்வியை தழுவினார்கள்.
புழல் மத்திய சிறையில் 34 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 32 பேர் வெற்றி பெற்றார்கள். வேலூரில் 3 பெண் கைதிகளும், 7 ஆண் கைதிகளும் தேர்வு எழுதியதில், பெண் கைதிகள் 3 பேரும் பாசாகி விட்டனர். ஆண் கைதிகளில் 4 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றார்கள். சேலத்தில் 7 பேரில் 6 பேர் தேர்வானார்கள்.
கோவையில் தேர்வு எழுதிய 18 பேரும், திருச்சியில் தேர்வு எழுதிய ஒருவரும், புதுக்கோட்டையில் தேர்வு எழுதிய 3 பேரும் பாஸ் செய்து விட்டனர். கடலூரில் 4 பேர் தேர்வு எழுதியதில் 3 பேரும், பாளையங்கோட்டையில் 26 பேரில் 21 பேரும், மதுரையில் 10 பேரில் 9 பேரும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற ஜெயக்குமார் 8 ஆவது வகுப்பு படித்தவர்.
தற்போது 10 ஆவது வகுப்பு தேர்வு எழுதி பாசாகிவிட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, தற்போது விடுதலைக்காக போராடி வரும் பேரறிவாளன் சிறையில் இருந்த படியே எம்.ஏ.எம்.பில் படித்துள்ளார். அவர் பிளஸ் 2 தேர்வில் 1,096 மார்க் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதே வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள இன்னொருவரான முருகன் பிளஸ் 2 வணிகவியல் தேர்வில் 200-க்கு 200 மார்க்குகள் பெற்று சாதனை படைத்தார்.
சிறைகைதிகளை நெறிபடுத்தி, அவர்களுக்கு பாடம் நடத்தி வெற்றி வாகை சூட வைத்த, தன்னார்வ தொண்டு நிறுவன ஆசிரியர் சா.ராசேந்திரன் மற்றும் அவரோடு சேர்ந்த ஆசிரியர் குழுவினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு, சிறைத்துறை இயக்குனர் திரிபாதி, டி.ஐ.ஜி.க்கள் மவுரியா, ராஜேந்திரன், துரைசாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications