என்னத்தச் சொல்ல.. விஜயகாந்த் உள்பட 103 தேமுதிகவினரின் டெபாசிட் காலி.. ஒருவர் மட்டும் தப்பினார்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் டெபாசிட்டை கூண்டோடு பறி கொடுத்த கட்சிகளாக தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தமாகா ஆகியவை திகழ்கின்றன. அதேபோல பாஜகவும் கூட சொற்ப தொகுதிகளில்தான் டெபாசிட்டைத் திரும்பப் பெற்றது.
வரலாறு காணாத அளவில் விதம் விதமான கூட்டணிகளை இந்தத் தேர்தலில் மக்கள் கண்டனர். ஆனாலும் திமுகவும், அதிமுகவும் அதைப் பார்த்து சற்றும் அலட்டிக் கொள்ளவே இல்லை. வழக்கம் போல அந்தக் கட்சிகளுக்கு சாதமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளது.
என்ன, வழக்கமாக மாறி மாறி ஆட்சி அமைப்பார்கள். இந்த முறை ஆட்சி மாறாமல் அதிமுகவிடமே தங்கி விட்டது. திமுகவுக்கு 2வது இடம். இந்த இருவரையும் தவிர மற்றவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர்.

தேமுதிகவின் பரிதாபம்
இந்தத் தேர்தலில் பெரும் பாதிப்பை சந்தித்த கட்சி தேமுதிகதான். இது நாள் வரை சாலிடான வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு சப்ஜாடாக பேசி வந்த கட்சி தேமுதிக. ஆனால் இத்தேர்தலில் அதன் வாக்கு வங்கியை தரை மட்டமாக்கி விட்டனர் மக்கள்.

பரிதாப தோல்வி
தேமுதிக மொத்தம் 104 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. மாறாக அத்தனை இடங்களிலும் பரிதாபத் தோல்வியே மிஞ்சியது.

103 இடங்களில் டெபாசிட் காலி
103 வேட்பாளர்கள் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளனர். அதில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும் ஒருவர் என்பதுதான் முக்கியமானது. ஒரு வேட்பாளருக்கு மட்டும் டெபாசிட் கிடைத்துள்ளது.

மதிமுக 27
இவர்கள் தவிர மதிமுக 27, சிபிஎம் 25, சிபிஐ 23, விடுதலைச் சிறுத்தைகள் 22, தமாகா 26 தொகுதிகளில் டெபாசிட்டைப் பறி கொடுத்துள்ளன.

பாஜகவுக்கு 180 - பாமக 212
பாஜகவுக்கு 180 இடங்களில் டெபாசிட் காலியாகியுள்ளது. 4 இடங்களில் மட்டுமே டெபாசிட் கிடைத்துள்ளது. பாமக கட்சிக்கு 212 இடங்களில் டெபாசிட் தொகை பறி போய் விட்டது.

234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அனைத்து இடங்களிலும் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. அதேபோல 32 தொகுதிகளில் போட்டியிட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.












Click it and Unblock the Notifications