இலங்கை கடற்படையால் 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-3 நாட்களில் 68 பேர் கைது- ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மேலும் 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் மொத்தம் 68 பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு ஒட்டிய பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கைக்குள் தமிழக மீனவர்கள் ஊடுருவியதாக சுட்டுக் கொலை செய்வதும் கைது செய்து சிறையில் அடைப்பதும் பல்லாண்டுகளாக நீடிக்கும் துயரம்.
தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோர் இதுவரை இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசுகள் இதுவரை எந்த ஒரு கண்டன நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை.

2 இடங்களில் 55 பேர் கைது
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. ராமேஸ்வரம் மீனவர்கள் 55 பேரை 2 இடங்களில் நடுக்கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை. இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எம்.பிக்கள், தலைவர்கள் கண்டனம்
தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குஜராத் மீனவர் படுகொலையும் மத்திய அரசும்
அண்மையில் குஜராத் மீனவர் ஒருவரை பாகிஸ்தான் கடற்படை சுட்டுக் கொலை செய்தது. அப்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. அதேபோல் இலங்கை தூதரையும் நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை..

மேலும் 13 பேர் கைது- வேலை நிறுத்தம்
இதனிடையே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மொத்தம் தமிழக மீனவர்கள் 68 பேரை கடந்த 3 நாட்களில் கைது செய்துள்ளது இலங்கை. தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications