இது வெறும் ஆரம்பம் தான்! 13,000 பள்ளிகளில் சிறார் படங்கள் திரையிட முடிவு.. அமைச்சர் அன்பில் மகேஷ்!
கும்பகோணம்: தமிழகத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிட 13 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நடப்புக் கல்வி ஆண்டு தொடங்கியது முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேற்படுத்தும் வகையில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

சிறார் திரைப்பட விழா
குழந்தைகள் பார்ப்பதற்கு என தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டும் என்ற நோக்கில் பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப் புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதும்தான் என்பதை புரிந்து சிறார் திரைப்படங்கள் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி
அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் மூலமாக 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் இப்பொறுப்பு வழங்கப்படும்.

சுற்றுலாப் பயணம்
திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் எனவும், சிறார் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர். சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு, மாநில அளவில் ஒரு வாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பேச்சு
இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பி ல் மகேஷ், தமிழகத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிட 13 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி நிச்சயம் வெற்றிகரமாக நடைபெறும். இதன்மூலம் குழந்தைகளுக்கு விமர்சனப் பார்வை வளரும். அதேபோல் சிறந்த விமர்சனங்கள் கூறும் குழந்தைகள், திரைத்துறை ஜாம்பவான்களோடு உரையாடுவர். அதன் பின்னர் 15 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடு சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்படுவர். இது ஆரம்பக் கட்டம் தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications