இலங்கைப் படையால் சிறை பிடிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள்... சிறையில் அடைப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 15 தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஜூன் 12ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மீன் பிடித் தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிக்க கடலுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

வழக்கம்போல கச்சத்தீவின் அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிரடியாக அவர்களைச் சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் 15 மீனவர்களையும் அவர்களுடைய 3 படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
நேற்று மாலை கிட்டதட்ட 734 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள். மீன்களின் வரத்து குறைவால் மத்திய கடல் வரை சென்ற மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டனர்.
இந்நிலையில் 3 படகுகளைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களான பிரிட்டோ, குத்புதின், நிசாமுதீன் ஆகியவர்கள் உட்பட 15 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்திருந்து, இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் ஜூன் 12ம் தேதி வரைக் காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications