ராணுவ பணியில் சேர லட்சம் ரூபாய்... போலி நியமன உத்தரவு: சிறைக்குச் சென்ற 16 பேர்
திருச்சி: இந்திய ராணுவத்தின் சிப்பாய் பணியில் சேர, போலி பணி நியமன உத்தரவுகளுடன் வந்த, 16 இளைஞர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
திருச்சியில் இயங்கி வரும், 117 பிரதேச ராணுவப் படையின் அலுவலகத்தில், ஒரு மாதத்துக்கு முன், இந்திய ராணுவத்தின் சிப்பாய் பணிக்கு, 91 பேரை நியமிக்க, தேர்வு நடத்தப்பட்டது. பல்வேறு கட்ட சோதனை முடிந்த பின், 91 பேருக்கு பணி நியமன உத்தரவு அனுப்பப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு, திருச்சி, 117 பிரதேச ராணுவப்படை அலுவலகத்தில், அவர்கள் பணியில் சேர உத்தரவிடப்பட்டிருந்தது.
நியமன உத்தரவு கொடுத்ததை விட, 16 பேர் அதிகம் வந்தனர். அவர்களின் பணி நியமன உத்தரவை ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிந்தது. இதையடுத்து, 117 பிரதேச ராணுவப் படையின் கர்னல் ஜார்ஜ், 16 பேரையும், திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார்.
போலீசில் அவர் அளித்துள்ள புகாரில், "போலி பணி நியமன உத்தரவு மூலம், ராணுவத்தில் சேர வந்தவர்கள் மீதும், அவர்களை கொண்டு வந்து விட்ட கருப்பசாமி என்பவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. போலி பணி நியமன உத்தரவுடன் வந்த, 16 பேரில், 15 பேர், திருநெல்வேலி மாவட்டத்தையும், ஒருவர், தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்ந்தவர் என்பது, விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தான், ஒவ்வொருவரிடமும் தலா, 1.20 லட்சம் முதல், 1.70 லட்சம் ரூபாய் வரை, வாங்கி, போலி நியமன உத்தரவை கொடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமாந்த வாலிபர்கள்
ராணுவத்தில் சேர வேண்டும் என்று கனவுடன் இருந்த திருநெல்வேலி இளைஞர்கள் சிலர் திருச்சியில் செலக்சனுக்குச் சென்றுள்ளனர். அவர்களை அணுகிய, விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, " தான் பயிற்சி அலுவலர் என்றும் தேர்வில் பங்கேற்க வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று திரும்ப அனுப்பி யுள்ளார்.
அவர், "ஆர்மி' என்று எழுதிய மாருதி காரில், திருச்சி ராணுவ அலுவலகத்துக்குள் வந்ததால், இளைஞர்கள் 16 பேரும் கருப்பசாமியை நம்பியுள்ளனர். 1 லட்சத்துக்கு மேல் பணம் வாங்கி, பணி நியமன உத்தரவு கொடுத்த அவர், நேற்று காலை, வேனில் அழைத்து வந்து, ராணுவ அலுவலகத்தின் வெளியே இறக்கி விட்டுள்ளார். இந்த "உத்தரவை அதிகாரிகளிடம் காட்டினால், அவர்கள் ராணுவ சீருடை தருவர். அதை அணிந்து கொண்டு வேலையில் சேர்ந்து விடுங்கள்' என்று கூறியுள்ளார். அதை நம்பி உள்ளே வந்த 16 பேரும் இப்போது குற்றவாளிகளாக போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். கருப்பசாமியின் வங்கிக் கணக்கில் தான், பணம் செலுத்தியதாகவும் இளைஞர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications