கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே "ஹாட்"டான கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாக வாசலிலேயே கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கலெக்டர் அலுவலக வாசலிலேயே கஞ்சா விற்பனை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலக வாயிலுக்கு எதிரே தினமும் ஒரு முதியவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்வது வழக்கம். கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர் அலுவலகம் முடிந்து அவரிடம் காய்கறி வாங்கி செல்வவார்கள்.

இந்த நிலையில் நெல்லை ஆர்டிஓ பெர்மி வித்யாவுக்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் நெல்லை கலெக்டர் அலுவலக வாயில் அருகே உள்ள தள்ளுவண்டியில் காய்கறிக்குள் கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை மறைத்து விற்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாலை 5 மணி அளவில் ஆர்டிஓ பெர்மி வித்யா மற்றும் தாசில்தார் கிறிஸ்டோபர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சந்தேகத்திற்குரிய தள்ளுவண்டி காய்கறிக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
காய்கறிகளைக் கீறிப் பார்த்தபோது அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காய்கறி வியாபாரியான நெல்லை கைலாசபுரத்தை சேர்ந்த இசக்கி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பாளை சமாதானபுரத்தை சேர்ந்த முத்து ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தன்ர்.
இந்த தள்ளுவண்டியில் அழுகிய நிலையில் இருக்கும் காய்கறிக்குள் கஞ்சா பொட்டலத்தை வைத்து விற்று வந்துள்ளனர். தினசரி ஓவ்வொரு காய்கறிக்குள் மாறி மாறி வைத்து விற்பனை செய்துள்ளனர். விற்றவர் முதியவர் என்பதால் யாருக்கும் சந்தேகமும் வரவில்லை.












Click it and Unblock the Notifications