ஹெல்மெட் அணிந்தும் பயனில்லை... கோவை, சென்னையில் 2 பேர் பலி
சென்னை/கோவை: ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டினால் விபத்தில் சிக்கினாலும் உயிரிழப்பு ஏற்படாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியதால் நேற்று முதல் தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவையிலும் சென்னையிலும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிய இருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியதை அடுத்து தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் மரணம்
இந்த நிலையில் சென்னையில் கழிவுநீர் லாரி மோதிய விபத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர் உயிரிழந்தார். பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் ஈச்சங்காடு அருகே நிகழ்ந்த இந்த விபத்து காரணமாக வட்டச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்தும் உயிரிழந்தவர் யார் என போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை வேளச்சேரியில் நேற்று நடந்த ஒரு விபத்திலும், ஹெல்மெட் அணிந்து சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இளம்பெண் மரணம்
இதேபோல கோவையில் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்து விட்டார். உயிரிழந்த பெண்ணின் பெயர் காஞ்சனா. இவர் கோவை ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் இவருக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் சிங்காநல்லூருக்கு புறப்பட்டுள்ளார். ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று இவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட காஞ்சனா, அங்கிருந்த டிவைடர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஹெல்மெட் அணிந்து சென்ற பெண் தலையில் அடிபட்டு இறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
சட்டத்தை திரும்ப பெறுக
ஹெல்மெட் அணிவதால் பின்னால் வரும் வாகனங்களை காண முடிவதில்லை. அதேபோல் ஹெல்மெட் அணிந்திருக்கும் போது பின்னால் வரும் வாகனங்கள் ஒலிக்கும் ஹாரன் சத்தங்களையும் கேட்க முடிவதில்லை. இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே கட்டாய ஹெல்மெட் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஹெல்மெட் தரமானதா?
அதேநேரத்தில் தரமான ஹெல்மெட் அணியாததும், ஹெல்மெட்டை சரியாக அணியாததுமே உயிரிழப்பு ஏற்பட காரணம் என்றும் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய பெண்ணின் ஹெல்மெட் உடைந்திருக்கிறது. தரமான ஹெல்மெட் அணியும் போது ஹெல்மெட் உடையாது.
சரியாக அணிவது முக்கியம்
அதேபோல் ஹெல்மெட்டை சரியாக அணிந்திருந்தால் அது கழன்றும் போகாது. எனவே தரமான ஹெல் மெட்டை சரியாக அணிவதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து கூறியுள்ளனர். ஏராளமானோர் ஹெல்மெட்டை தலையில் மாட்டுவதோடு சரி அதற்கான கிளிப் போடுவதில்லை இதுவும் தவறான செயலாகும். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications