திருப்பத்தூர் பட்டாசு கடையில் திடீர் தீ.. 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பலி.. என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பலியாகினர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துகோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைக்கு இன்று விடுப்பு விடுக்கப்பட்ட நிலையில் துக்க வீட்டுக்கு பட்டாசு கேட்டு சிலர் வந்ததால் உரிமையாளர் குமார் கடையை திறந்த வேளையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஈச்சங்கால் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் புத்துக்கோவில் பகுதியில் பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதனால் கடையில் இருந்தவர்கள் தீயில் சிக்கினர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று தீயில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் நெருங்க முடியவில்லை. இதனால் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. மேலும் 10 பேர் தீக்காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமார், பட்டாசு கடைக்கு விடுமுறை அளித்து இருந்தார். இதனால் பணியாளர்கள் யாரும் கடைக்கு வரவில்லை. இந்நிலையில் தான் துக்க வீட்டுக்கு பட்டாசு வேண்டும் என குமாருக்கு போன் செய்து ஒருவர் கேட்டுள்ளார். இதையடுத்து குமாரும் கடையை திறந்து பட்டாசுகளை எடுத்து அவர்களிடம் வழங்க முயன்ற வேளையில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தீவிபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். பட்டாசு கடை தீவிபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications