திமுகவின் ரகசிய அழைப்பு… ராமதாஸின் தூண்டில்… வைகோவின் வியூகம்… எங்கு செல்வார் விஜயகாந்த்?
சென்னை: திமுக ஒருபக்கம் இழுக்க... வைகோ ஒரு பக்கம் அழைக்க.... பாமக மற்றொரு பக்கம் ஜாடை காட்ட... பாஜக ரகசிய தூது விட என நாளுக்கு நாள் தேமுதிகவிற்கு கூட்டணிக்கான கதவுகளும், ஜன்னல்களும் திறக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
விஜயகாந்தை கோமாளி ரேஞ்சுக்கு பலரும் சித்தரித்தாலும் தமிழக அரசியலில் அவருக்கு தனியாக ஒரு இடம் இருக்கவே செய்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது. ஆளும் அதிமுகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று நம்பும் திமுக, கூட்டணிக்கான கதவை திறந்து வைத்து விட்டது.
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி வரும் பாமகவோ, பாஜக, தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்து வருகிறது.தலைமைப் பதவி தருகிறோம் எங்களுடன் வாருங்கள் என்று விஜயகாந்திற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் மக்கள் நலக் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகோ. அதே நேரத்தில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேமுதிகவை தங்களுடைய கூட்டணியில் இணைக்க ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தேமுதிக ஆட்சியமைக்கும் என்று பேசி வருகிறார் பிரேமலதா. தேர்தல் கூட்டணியை அறிவிக்க இன்னமும் நேரம் இருக்கிறது என்று யாருக்கும் பிடி கொடுக்காமல் பேசி வருகிறார் விஜயகாந்த். 'குடிகாரன்' என்று கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த திமுகவுடன் போய் விஜயகாந்த் எப்படி சேருவார்? என்று ஒருசாரார் கேட்கின்றனர். பரம வைரியான பாமக உடன் போய் கூட்டணியில் இணைவாரா விஜயகாந்த்? என்றும் கேட்கும் அரசியல் நோக்கர்கள் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் எடுக்கப் போகும் நிலைதான் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் ரகசிய தூது
சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படாவிட்டாலும் திமுகவை முன்னெடுத்துச்செல்கிறார் ஸ்டாலின். அதிமுகவை ஆட்சியை விட்டு விரட்ட பலம் வாய்ந்த கூட்டணி அமைத்தால் மட்டுமே முடியும் என்று நினைக்கும் ஸ்டாலின், தேமுதிகவை இழுக்க ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டாராம்.

வாங்க பழகலாம்
அதிமுக ஆட்சி அனைத்து நிலைகளிலும் தோல்வியுற்ற ஆட்சியாகவே உள்ளது, இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இந்த மாற்றத்தை திமுக நிகழ்த்த முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சகோதர உணர்வுடன் பரஸ்பர புரிதல் உள்ள அரசியல் கட்சிகள் சேர்ந்து பணியாற்ற முடியும். முன் நிபந்தனைகள் எதுவும் இவ்விவகாரத்தில் இல்லை என்று கூறியுள்ளார்.

தூண்டில் போடும் ராமதாஸ்
தேமுதிகவை பரம வைரியாக கருதும் ராமதாஸ், கடந்த லோக்சபா தேர்தலில் ஒரே கூட்டணியில் இருந்தும் தேமுதிகவிற்கு ஆதரவாக செயல்படவில்லை. சேலத்தில் சுதீஷ் தோல்விக்கு பல உள்ளடி வேலைகளை செய்தது பாமக. இந்த நிலையில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணி வரலாம் என்று விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராமதாஸ்.

தலைமைப் பதவி
மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து அமைத்துள்ள மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் விஜயகாந்த் இணைய வேண்டும் என்று வைகோ அழைத்துள்ளார். விஜயகாந்த் வரும் பட்சத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதோடு, கூட்டணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை விட்டுத்தரவும் வைகோ சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தேமுதிகவும் கூட்டணிகளும்
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக 2006 சட்டசபை தேர்தலில் மக்களுடன், கடவுளுடன் மட்டுமே கூட்டணி என்று கூறி தனித்து போட்டியிட்டது. அப்போது, விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்று தனியாக சட்டசபைக்கு சென்றார்.

அதிமுக உடன் கூட்டணி
2011ம் சட்டசபை தேர்தலில், கூட்டணி வேண்டும் என, மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தவதே, அ.தி.மு.க.வுடன் சேர்ந்தார், விஜயகாந்த். அதன் பலனாக, 29 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர்; சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும், விஜயகாந்துக்கு கிடைத்தது. ஆனால், அடுத்தடுத்து நடந்த மோதல்களால், அதிமுக - தேமுதிக கூட்டணி சில மாதங்களில் உடைந்தது.

பாஜக உடன் கூட்டணி
அடுத்து வந்த, 2014 லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட, 14 இடங்களிலும், கட்சி தோல்வி அடைந்தது. தே.மு.தி.க.வினால், பா.ஜ.க - பா.ம.க., பலன் அடைந்தன. அந்த பலன், தே.மு.தி.க.,வுக்கு கிடைக்கவில்லை.
இதை விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் உணர்ந்து உள்ளனர். எனினும் சட்டசபை தேர்தலுக்கு என்ன முடிவெடுப்பது என புரியாமல், குழப்பத்தில் உள்ளனர்.

வெற்றி கிடைக்குமா?
பாஜக பக்கம் போனாலோ, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் பக்கம் போனாலோ விஜயகாந்துக்கு, முதல்வர் வேட்பாளர் அந்தஸ்து கிடைக்கலாம்; ஆனால், வெற்றி வாய்ப்பு, கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர் மாவட்ட செயலாளர்கள்.

திமுக உடன் கூட்டணி
அதிமுகவை வீழ்த்த திமுக உடன் கூட்டணி சேர்வது தான் சாதுர்யமான முடிவாக இருக்கும் என, மாவட்ட செயலர்கள் வலியுறுத்துகின்றனர். திமுகவும் வலுவான கூட்டணிக்காக, தவம் கிடக்கிறது. அங்கே, அதிகமான தொகுதிகள் கிடைக்கும்; தேர்தல் செலவுகளையும் ஏற்றுக் கொள்வர். அவர்களோடு கைகோர்த்தால் மட்டுமே, பொது எதிரியான அதிமுகவை வீழ்த்த முடியும் என, விஜயகாந்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

கூட்டணி ஆட்சி
தற்போதுள்ள சூழலில், திமுகவை, கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்க வைக்கக்கூடிய சக்தி, தே.மு.தி.க.,வுக்கு தான் இருக்கிறது. அதற்கேற்ப, அக்கட்சியிடம் இருந்து, அதிக தொகுதிகளை பெறவும் முடியும். கூட்டணி ஆட்சி சூழ்நிலை உருவானால், தேமுதிக பெரிய கட்சியாக வளர வாய்ப்பு கிடைக்கும் என, விஜயகாந்திடம் வலியுறுத்தி வருகின்றனர் மாவட்ட செயலாளர்கள்.

விஜயகாந்தின் முடிவு என்ன?
எனினும் வழக்கம் போலவே, எந்த ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல், தடுமாற்றத்தில் இருக்கிறார் விஜயகாந்த். அவர் எடுக்கும் சரியான முடிவுதான் தேமுதிகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications