23வது மதிமுக பொதுக்குழு, செயற்குழு.. அத்தனை பேர் பார்வையும் தூத்துக்குடியை நோக்கி!
தூத்துக்குடி: தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தூத்துக்குடியில் நடக்கும் மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழு - செயற்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்வாவுக்கும், அரிவாளுக்கும் மட்டுமல்லாமல் கல்விக்கும் பெயர் போன திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் பிறந்த வைகோ 1964ம் ஆண்டு அறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு கருத்தரங்கத்தில் முதன்முதலில் பேசினார்.
அண்ணா மீது கொண்ட மாபெரும் பற்றால் அவரது வழிகாட்டுதலின்படி அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.

பேச்சாற்றல் - செயல் திறன்
திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த வைகோ தனது மாபெரும் பேச்சாற்றலால் தொண்டர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்மக்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டார். தனது அரசியல் வாழ்வில் மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் வைகோ.

92ல் திமுகவிலிருந்து வெளியேற்றம்
திமுகவில் தனக்கென்று தனிப்பெரும் கூட்டத்தையும் கொண்டிருந்த வைகோ கடந்த 1992ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல முயன்றார் என்ற வீண்பழியுடன் வைகோ அங்கிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

பொடா சட்டத்தில் சிறைவாசம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக கடந்த 2001ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ 19மாதங்கள் சிறையில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு வைகோவிற்கு சாதகமாக மாறி, அவர் இதில் இருந்து நிரத்தர விடுதலை பெற்றார்.

மக்களுக்காக உழைக்கும் அரசியல்வாதி
தமிழக அரசியலில் தனக்கென்று தனிப்பட்டாளத்தை உருவாக்கிய வைகோ அரசியலில் மாபெரும் சக்தியாகவே திகழ்ந்தார். பொதுமக்கள் பிரச்சனைகள் தீரவும், விவசாயிகளுக்காகவும், ஈழத்தில் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், உலக தமிழர்களின் நலனுக்காகவும் மைக் தெறிக்கும் அளவுக்கு உக்கிரமாக பேசும் வைகோவிற்கு மக்கள் மத்தியில் இன்றும் தனி செல்வாக்கு உண்டு.

மது ஒழிப்புக்காக தீவிரப் போராட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்காக துவங்கிய மது ஒழிப்பு நடைப்பயணம், முல்லை பெரியாறு பிரச்சனையில் போராடி வெற்றி கண்டது, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை என ஒவ்வொரு போராட்டங்களிலும் வைகோ மக்கள் மனதில் ஜொலிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் மிளிர்கிறார்.

தேர்தல் களத்தில் தொடர் சரிவு
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவில் இருந்து வெளியேறிய வைகோ அத்தேர்தலை போட்டியிடாது புறக்கணித்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வைகோ பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் குதித்தார். நிச்சயம் இந்த முறை வைகோ தேர்தலில் பெற்றிபெறுவார் என்று பலமாக எதிர்பார்க்கப்பட்டபோதும் தோல்வியை தழுவினார்.

அடுத்தது என்ன
தனக்கென்று தனிசெல்வாக்குடன் திகழும் வைகோ தமிழக அரசியலில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாகவே இருந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேத்தியின் திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அங்கே யாரும் எதிர்பாராத வகையில் திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசியது, பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது என சமீபகால அதிரடியான நிகழ்வுகள் வைகோவின் அடுத்த அரசியல் அத்தியாத்தை துவங்கும் என்ற எதிர்பார்ப்பு மதிமுக தொண்டர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.

தூத்துக்குடியில்
இப்படிப்பட்ட சூழலில் மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழு&செயற்குழுக்கூட்டம் தூத்துக்குடியில் பிப்ரவரி முதல் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தை இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாக நடத்திடும் பொருட்டு மாவட்ட செயலாளர் ஜோயல் தூத்துக்குடியில் பிரமாண்டமான ஏவிஎம் கமலவேல் மகாலை தேர்வு செய்துள்ளார். பொதுக்குழு தொடர்பான சுவர் விளம்பரங்கள் மாவட்டம் முழுவதும் மின்னல்போல பளிச்சிட்டு வருகிறது.

சென்னைக்கு வெளியே
பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் மாநில பொதுக்குழு - செயற்குழுக்கூட்டங்கள் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் தான் நடக்கும். ஆனால் மதிமுகவின் 23வது பொதுக்குழு - செயற்குழுக் கூட்டம் தென் தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடியில் முதன் முதலாக நடக்க இருப்பது இப்போதே அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு மதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பலமாக எழுந்துள்ளது.

முக்கியப் பிரச்சினைகள் குறித்து
இந்தக்கூட்டத்தில் வரும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பலமான கூட்டணி அமைத்து சந்திப்பது குறித்தும், கெயில் நிறுவனம், கர்நாடகா காவிரி பிரச்சனைகளில் இருந்து தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடுவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. இதுபோக வரும் மே மாதம் சென்னையில் வைகோ அரசியலுக்கு வந்த 50வது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

"தளபதி" ஜோயல் தலைமையில் ஏற்பாடுகள்
தூத்துக்குடியை பொறுத்தவரை வைகோவிற்கும், வைகோவின் போர்படை தளபதியாக திகழும் மாவட்ட செயலாளர் ஜோயலுக்கும் மக்களிடத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு கடந்தகால தேர்தல்களில் பெரும் வாக்குவங்கியாக இருப்பது எதிர் அணிகளை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அறிந்த சேதியாகும்.

மாற்றம் வருமா...
மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களின் பிரச்சனைகளுக்காக உடனே குரல் கொடுப்பதுடன், அதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாவட்ட செயலாளர் ஜோயலின் முழுமுயற்சியால் இங்கு நடைபெறும் மதிமுகவின் மாநில பொதுக்குழு&செயற்குழுக் கூட்டம் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications