பெரம்பலூர்: பள்ளி கட்டுமான பணியில் விபத்து.. கான்கிரீட் சரிந்து விழுந்து 3 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி கட்டுமான பணியின்போது கான்கிரீட் சரிந்து விழுந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கட்டுமான தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டமாந்துறை பிரிவு ரோடு பகுதியில் அன்னை மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. நேற்றிரவு கான்கிரீட் அமைக்கும் பணியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கான்கிரீட் திடீரென சரிந்து விழுந்தது.இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம், லத்துவாடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் ப்ரியா(19) இதே கிராமத்தை சேர்ந்த நல்லு மனைவி காந்திமதி(40) மற்றும் பெயர் தெரியாத ஆண் தொழிலாளர் ஒருவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் உள்ளூரைச் சேர்ந்த ராஜா மனைவி சித்ரா(37) பெரியசாமி மனைவி சந்திரா (35) ஆகிய தொழிலாளர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து நடந்த உடன் பொறியாளரும் கான்ட்ராக்டரும் தப்பி ஓடிவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறையினர் தாமதமாக வந்தனர் என்றும் பணிகளை தாமதமாக துவக்கியதாலேயே மூன்று உயிர்களை இழக்க நேரிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications