கனமழை- கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி மூவர் பலி
கும்பகோணம்: வங்கக் கடலில் உருவான புயலால் வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கும்பகோணம் அருகே மழையின் போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மூவர் பலியாகி உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராசேந்திரன். இவரது மனைவி இந்திராகாந்தி. இவர்களது மகன் ரவிவர்மன் இரவு 1.30 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது கருப்புசாமி கோவில் தெருவில் மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காத ரவிவர்மன் மின் கம்பியை எதிர்பாராத விதமாக மிதித்து விட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மகன் தடுமாறி விழுந்ததை கண்ட அவரது தந்தை ராசேந்திரன் ஓடி வந்து ரவிவர்மனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனால் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர்.
இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பெரம்பூர் கரக்கம் நடுத் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் கணேசன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கும் முன்பு ஊருக்கு கணேசன் வந்தார். இன்று அதிகாலை கணேசன் வீட்டை விட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். மழை பெய்து கொண்டே இருந்ததால், கணேசன் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றார்.
அப்போது தெருவில் இருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து கணேசன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் அவர் மீது தாக்கியதால் உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications