தொங்குதே குவார்ட்டர் பாட்டலுக்குள்ளே அதென்ன? டாஸ்மாக்கில் இந்த 3 பிராண்டுக்கும் திடீர் தடை? போச்சு
திருப்பத்தூர்: டாஸ்மாக் மதுவிற்பனை தொடர்பாக நாளுக்கு நாள் புகார்களும், குற்றச்சாட்டுகளும் பெருகிவருவது, குடிமகன்களை அதிர செய்து வருகிறதாம். இதுகுறித்த முறையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடித்து வருகின்றன.. ஆனால், டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், அதை வாங்க முடியாமல், கள்ளச்சாராயம் குடித்து பலர் இறக்க நேரிடுகிறது, அதனால், குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று மற்றொரு தரப்பில் கோரிக்கைகள் எழுகின்றன.

ஒருபக்கம் மதுவிற்பனைக்கு தடை, மறுபக்கம் குறைந்த விலையில் மது விற்பனை என்ற இருவிதமான கோரிக்கைகளுக்கு நடுவில், பல்வேறு சலசலப்புகளும், சர்ச்சைகளும் டாஸ்மாக்குகளிலிருந்து வெடித்து வருகின்றன.
தமிழக அரசு: 2 நாட்களுக்கு முன்புகூட, தரமற்ற மதுவை விற்பனை செய்துவிட்டதாக புகார்கள் கிளம்பின.. அதாவது, டாஸ்மாக் கடைகளில் ஏராளமான பலவகை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், ட்ரோபிகானா விஎஸ்ஓபி பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி போன்றவற்றில் உடனே போதை ஏறுவதில்லை என்று முணுமுணுப்புகள் உள்ளன..
இந்த 3 பிராண்டுகளுமே உண்மையான சரக்கா? அல்லது போலி சரக்கா? என்று குடிமகன்கள் புலம்பி தள்ளவும், இதுகுறித்து உண்மைத்தன்மை அறிய டாஸ்மாக் நிர்வாகமே முடிவு செய்தது.
விற்பனை கூடாது: இதற்காக அந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்து பார்த்தனர். அப்போதுதான், 3 வித மதுபானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆல்கஹால் அளவு 42.84 சதவீதம் இருக்க வேண்டும் என்ற நிலையில், அதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் அதை கடைகளில் விற்க கூடாது.
எனவே, வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/20), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அந்த மது பாட்டில்களை விற்க வேண்டாம் என்றும், இந்த மது வகைகள் விற்பனைக்கு உகந்தது அல்ல என்பதால், அவைகளை மதுபான கிடங்குக்கே திரும்ப ஒப்படைக்குமாறும் கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருந்தது.
அதிர்ச்சி: தரமற்ற 3 மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதை அறிந்து குடிமகன்கள் கடுமையான அதிர்ச்சியை தந்தனர்.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே இன்னொரு அதிர்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது..
ஆலங்காயம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.. நேற்று ஞாயிற்றுக்கிமை, மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த மதுபாட்டிலுக்குள் ஏதோ மிதப்பது போல தெரிந்துள்ளது..
மது பாட்டில்: எனவே, பாட்டிலை உற்று நோக்கினால், பிளாஸ்டிக் துண்டுகளும், இறந்த நிலையில் புழுக்களும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கொண்டுபோய் காட்டி, கேள்வி எழுப்பினார்.
ஆனால், அந்த கடைக்காரர் இதற்கு எதுவுமே சரியாக பதில் சொல்லவில்லையாம்.. மாறாக, அந்த பாட்டிலை, திரும்ப பெறுவதிலேயே குறியாக இருந்துள்ளார். இதனால், அந்த பாட்டிலுடனேயே மதுப்பிரியர் நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டார்.. பாட்டிலை காட்டி, புகாரையும் தந்துள்ளார்..ஆனால் இந்த புகார் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று சொல்லி, அவரை போலீசார் திருப்பி அனுப்பி விட்டார்களாம்.
வீடியோ: இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த மதுப்பிரியர், அந்த பாட்டிலை செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. இந்த வீடியோ இணையத்தில் பரவி குடிமகன்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துவிட்டது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் வெடித்துள்ளன..












Click it and Unblock the Notifications