தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் முடக்கம்.. மின் வெட்டு வருமா.. மக்கள் அச்சம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வெட்டு ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு முதல் துவக்கப்பட்டது. முதலில் ஒரு யூனிட்டுடன் துவக்கப்பட்ட இந்த மின் நிலையத்தில் மேலும் நான்கு யூனிட்டுகள் துவங்கப்பட்டன. ஒரு யூனிட்டில் தலா 210 மெகா வாட் வீதம் 5 யூனிட்டுகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் இந்த யூனிட்டுகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே, மிகை உற்பத்தி காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2வது யூனிட் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் ஸ்சுவிட் யார்டு பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக அங்குள்ள அனைத்து யூனிட்டுகளும் முடங்கியதால் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 5 யூனிட்டுகளிலும் பழுது நீக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து, இரவில் 3 மற்றும் 5வது யூனிட்டுகள் இயங்க துவங்கின. இதனால் தற்போது இரண்டு யூனிட்டுகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் 610 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வெட்டு வருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications