கள்ளக்குறிச்சியில் 36 "தலித்துகள்" மரணம்- கார்கே, ராகுல் மவுனம் ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன்
டெல்லி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் 36 பேர் "தலித்துகள்"; ஆனால் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மவுனம் காப்பது ஏன்? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லாதது ஏன்? என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த பலரும் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சிக்கு தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சியில் உடல்நலன் பாதிக்கப்பட்டோர், பெற்றோரை இழந்த மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்குமான உதவி நடவடிக்கைகளை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் சுமார் 55 பேர் இறந்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 36 பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும், சமூக நீதி பேசுகின்ற இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று வரை அவர்களை நேரில் சென்று பார்க்காமல் இருக்கிறார் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் போன்றவர்கள் இதைப் பற்றி பேசுவதற்கு கூட தயாராக இல்லை என்றும் கூறினார். மேலும், அதனால் தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற நமது தலைவர்கள் சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் என்று கூறினார்.
போலியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சமூக நீதிக்கு மத்தியில், அரசமைப்புச் சட்டத்தை மதிக்கக் கூடிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications