சேலம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- உடல் சிதறி 4 பேர் பலி
சேலம்: சேலம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உடல்சிதறி பலியானார்கள். படுகாயமடைந்த 2 பேர் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த எளமாகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அப்பகுதியில் பட்டாசு தொழிற்சாலை வைத்துள்ளார். தேர்தலையொட்டி, ஆர்டர் குவிந்ததால் பட்டாசு தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. தினசரி 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சரவெடி உள்ளிட்ட வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்றிரவு வழக்கம்போல் 7 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 8.30 மணியளவில் பட்டாசு ஆலை திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது.
அதில் பிரியா, எலமகவுண்டனூரை சேர்ந்த ராஜா, 30 கருத்தானூர் பகுதியை சேர்ந்த வெள்ளச்சி, 60 ஆகிய 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள். மேலும் சின்னப்பம்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் அஜித்குமார்,18, அலமேலு, 55, கவிதா 24 ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. அமித்குமார் சிங் மற்றும் தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், தீயணைப்பு மீட்பு படை வீரர்களும் சென்று தீயை அணைத்தனர்.
காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பிளஸ்2 மாணவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. மேலும், படுகாயமடைந்த மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாரமங்கலம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications