ஆர்.கே. நகரில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை... - தேர்தல் அதிகாரி
ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிகளில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கூடுதல் துணை ராணுவப்படை வர உள்ளதாக காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா கூறியுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களை கரண் சின்ஹாவும், தேர்தல் அதிகாரி கார்த்திகேயனும் கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது பேசிய தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றோ அல்லது நாளையோ துவங்கும் என்றார். வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் ஆர்.கே.நகரில் வாக்களிக்க இயலாது என குறிப்பிட்டார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்
ஆர்.கே.நகர் தொகுதியில் 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆர்.கே.நகரின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 4 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குவியும் புகார்கள்
மேலும் பேசிய அவர் தேர்தல் தொடர்பாக வந்த 145 புகார்களில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் அலுவலர்களுக்கு நாளை இரண்டாம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூறினார்.

வேட்பாளர் செலவு கணக்கு
தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் கரண்சின்ஹா, வேட்பாளர்களின் பேட்டியை டி.வியில் அதிக நேரம் ஒளிப்பரப்பினால் தேர்தல் செலவாக கருதப்படும். அத்தொகை வேட்பாளர்களின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரம் குறித்து மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்புவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பறக்கும் படை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒரு ஷிப்டிற்கு 10 பறக்கும் படை வீதம் 100 பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கரண் சின்ஹா தெரிவித்தார். தேர்தல் சிறப்பு பார்வையாளர் மனோஜ் அகர்வால் நாளை சென்னை வர உள்ளதாக கூறிய கரண்சின்ஹா, தேர்தலின் போது ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்.

பணம் பறிமுதல்
ஆர்.கே.நகரில் ரூ.7 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1,694 காவலர்கள் ஆர்.கே.நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் கரண்சின்ஹா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
