பொதுதேர்வு எழுதும் 58 கைதிகள்- புழல் சிறையில் தொடக்கம்
சென்னை: சிறை கைதிகளும் இன்று தொடங்கிய +2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
+2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. வழக்கம் போல தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் தேர்வு எழுதுகிறார்கள். கடந்த ஆண்டு 37 கைதிகள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு 58 கைதிகள் பொதுதேர்வு எழுதுகிறார்கள்.
இவர்களில் 49 பேர் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஆவார்கள். சென்னை புழல் சிறைவாசிகள் 18 பேர் +2 பரீட்சை எழுதுவோர் பட்டியலில் உள்ளனர். மதுரை சிறையில் இருந்து 14 கைதிகளும், வேலூரில் இருந்து 2 பேரும், கோவையில் இருந்து 5 பேரும், சேலம் சிறையில் இருந்து 3 பேரும், பாயைங்கோட்டையில் இருந்து 4 பேரும், திருச்சியில் இருந்து 8 பேரும், கடலூரில் இருந்து 4 பேரும் பொதுத்தேர்வு எழுத தேர்வாகி உள்ளனர்.
பெண் கைதிகள் யாரும் இந்த ஆண்டு தேர்வு எழுத தேர்வாக வில்லை. சென்னை புழல் மத்திய சிறை தான் தேர்வு மையமாகும். தேர்வு எழுத மற்ற சிறைகளில் தேர்வாகி உள்ள கைதிகள் அனைவரும் நேற்று புழல் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பரீட்சை எழுத வந்துள்ள கைதிகள் தங்குவதற்கும், படிப்பதற்கும் தனி பிளாக்கில், விஷேச ஹால் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாடம் நடத்த 4 ஆசிரியர்களும் உள்ளனர். பரீட்சை எழுதுவதை கண்காணிக்க 3 ஆசிரியர்களையும் கல்வித்துறை நியமித்துள்ளது. பரீட்சை எழுதும் கைதிகளுக்கு விசேஷ சாப்பாடு கொடுக்கப்படுகிறது.
சாப்பாடு தவிர 3 முறை தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கேல், பேனா, பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்களும் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. +2 தேர்வை போல, 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவும் தமிழக சிறைகளில் கைதிகள் தயாராகி வருகிறார்கள்.
இதுவரை 5 பெண் கைதிகள் உள்பட சுமார் 60 கைதிகள், 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத பெயர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெயர் பதிவு செய்யும் பணி நடக்கிறது. முழுபட்டியலும் தயாரானவுடன் கைதிகளுக்கு ஆசிரியர்கள் மூலம் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான பாடம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
+2 தேர்வை சென்னை புழல் மத்திய சிறையில் சிறப்பாக எழுதிட சிறைத்துறை இயக்குனர் திரிபாதி, டி.ஐ.ஜி.க்கள் மவுரியா, ராஜேந்திரன் ஆகியோர் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications