9 மாதத்தில் 600 அறுவை சிகிச்சைகள்.. கள்ளக்குறிச்சி ஜிஹெச் கலக்கல் சாதனை
கள்ளக்குறிச்சி: கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரி மருத்துவமனை பலரது வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
கள்ளக்குறிச்சி என்றால் கலவரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். அதைவிட்டால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் என்று பலர் சொல்வார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த ஊரைப் பற்றிய பிம்பம் மக்கள் மனதில் தவறாகப் பதிந்துபோய்விட்டது. அப்படியல்ல, இந்த ஊரிலும் பல வியக்க வைக்கும் சாதனை நடந்து வருகிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது இந்தக் கள்ளக்குறிச்சி. அப்படி என்ன சாதனை என்று சிலர் கேட்கலாம். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை இதுவரை 5 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. மேலும் 9 மாதங்களில் மட்டும் 600 பேருக்கு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து சாதித்துக் காட்டியுள்ளது.

இது பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நேரு, “இது எங்கள் மருத்துவக் குழுவின் சாதனை என்றே சொல்வேன். வெறும் மருத்துவர்களால் மட்டுமே இதைச் சாதித்துவிட முடியாது. மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள் எனப் பலரது ஒத்துழைப்பு இருந்ததால்தான் வழக்கத்தைவிட அதிகமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடிந்தது” என்று கூறியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைகளில் சுமார் 500க்கும் மேலானவை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவும் இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன என்பது மிகவும் கவனிக்க வேண்டிய விசயம். இந்தச் சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்து கொள்ள வேண்டும் எனில் 50ஆயிரம் தொடங்கி 1 லட்சம் வரை செலவாகும் என்கிறார் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தமிழ்ச்செல்வன்.
இந்த மருத்துவமனைக் கல்லூரியின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் மிக சிறப்பாக உள்ளது. வழக்கமான அரசு மருத்துவமனைகளைப் போல் இல்லாமல் தரமாகவும் தூய்மையாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல இங்கே அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் மிக நவீனத் தொழில்நுட்பங்களுடன் உள்ளன. ஏதோ ஒரு ஐடி பார்க் உள்ளாக வந்த ஒரு உணர்வைத் தருகிறது. பரந்து விரிந்த வாகன நிறுத்துமிடம் வசதியும் இங்கே உள்ளது. அதனால்தான் மக்கள் இந்த மருத்துவமனையை நோக்கிப் படை எடுத்து வருகின்றனர். இது மொத்தம் 6 மாடிகளைக் கொண்டுள்ளது. கள்ளக்குறிச்சியிருந்து சங்கராபுரம் செல்லும் சாலையை நோக்கி 4 கிமீட்டர் பயணித்தால் இந்த மருத்துவமனையை அடைந்துவிடலாம். இதன் அருகிலேயே மருத்துவ விடுதியும் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியில் முன்பு இந்தளவுக்குத் தரமான மருத்துவமனை இல்லை. அவசர சிகிச்சை என்றால் சென்னை அல்லது பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் ஆகிய இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இப்போது அந்த நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என இங்கே தேவையான அளவுக்கு பணியாளர்களும் உள்ளனர். தேவையான அளவுக்குப் படுக்கை வசதிகள், தரமான ஆபரேஷன் அறை என தனியாருக்குச் சவால்விடும் அளவுக்கு உள்ளது. கடந்த 4 ஆண்டுகள் முன்பு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். கடந்த 2022இல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரதமர் இதனைக் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications