விழுப்புரம் அருகே தானாக உடலில் தீ பிடித்து எரியும் குழந்தை: அண்ணனைப் போல் தம்பிக்கும் பாதிப்பு
விழுப்புரம்; விழுப்புரம் அருகே பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தை உடலில் திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கும் வானூர் அருகே உள்ள பரங்கிணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.
தற்போது, அவர்கள் நெடிமொழியனூர் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நர்மதா என்ற 3 வயது பெண் குழந்தை மற்றும் ஒரு வயதில் ராகுல் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த ஆண்டு குழந்தை ராகுல் உடலில் அடிக்கடி தீப்பற்றி எரிந்தது. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை ராகுலுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான் ராகுல்.
இந்த நிலையில் தாயார் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த 9ஆம்தேதி ஆண் குழந்தை பிறந்தது. வியாழக்கிழமையன்று வீட்டில் இருந்து போது திடீரென அந்த குழந்தையின் தொடை பகுதியில் தீப்பிடித்து காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் அந்த கிராமத்தினரும் உடனடியாக நெடிமொழியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது (படத்தில், குழந்தை முகம் மறைக்கப்பட்டுள்ளது).
நேற்று முன்தினம் இரவு முழுவதும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மீண்டும் உடலில் தீ பிடிக்கிறதா என கண்காணித்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக திண்டிவனம் வட்டாட்சியர் (பொறுப்பு) கோடீஸ்வரி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று நெடிமொழியனூர் கிராமம் சென்று கர்ணன் தம்பதி வசித்த குடிசை வீட்டை ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவரிடம் விசாரித்தனர்.
இந்த குழுவினர் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, குழந்தையின் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு உடலில் தீப்பிடித்து தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய குழந்தை ராகுலின் உடன் பிறந்த தம்பி என்பதால் மரபு ரீதியிலான பாதிப்பா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
ராகுல் உடலில் தீப்பிடித்தபோது அவனது உடலில் இருந்து தீப்பற்றி எரியும் வாயு ஒன்று தானாக உருவாவதாகவும், அதனால் தான் தீப்பிடிக்கிறது என்று சென்னை டாக்டர்களில் ஒருவர் கூறினார். ஆனால் இதுபற்றி ஆய்வு நடத்திய டாக்டர்கள் அப்போது குழந்தையின் உடலில் எந்த வாயுவும் உருவாகவில்லை என்று கூறினார்கள்.
ஆனால் அவனுடைய தம்பி உடலில் தானாக தீப்பற்றி எறிவதால் உண்மையிலேயே எரிவாயு உடலில் இருந்து உருவாகலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
