மயக்க மருந்து அதிகமானதால் 8 வயது குழந்தை பலி: உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
விருதுநகர்: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தொண்டை அறுவைச் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் அளவு அதிகமானதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட 8 வயது குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகள் சங்கீதா (8). 3ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்குத் தொண்டையில் புண் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். குணமாகாததால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்களிடம் காண்பித்தார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி அறுவைச் சிகிச்சை நடந்தது. ஆனால் அறுவைச் சிகிச்சைக்குப் பின் குழந்தை கண் திறக்காமல் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் அளவு அதிகமானதால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக இக்குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் 69 நாட்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை சங்கீதா உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் தங்களது குழந்தை இறந்தது. எனவே நியாயம் கிடைக்கும் வரை குழந்தையின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications