குணமடைந்த 93 பேர் வீடு திரும்பினர்.. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரில் 69 பேருக்கு சிகிச்சை!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 93 பேர் முழு உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் என மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், இன்று (ஜூன் 26) காலையில் கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமநாதன் (62), ஏசுதாஸ் என்ற இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இன்று மதியத்திற்கு மேல் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 5 பேர் பெண்கள். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 32 பேரும், சேலம் மருத்துவமனையில் 21 பேரும், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தலா 4 பேரும் உயிரிழந்து உள்ளனர். னேலும், 15 க்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தற்போது வரை 93 பேர் முழு உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய சூழலில் 69 பேர் சிகிச்சையில் உள்ளனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 69 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications