ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தமிழக அம்பேத்கர் சட்டப் பல்கலை. துணைவேந்தராக நியமிப்பதா? பரபர சர்ச்சை
அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரியின் நியமனம் சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video

சென்னை: அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தம்ம சூரிய நாராயண சாஸ்திரியின் பின்னணி குறித்து பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தம்ம சூரிய நாராயண சாஸ்திரி. ' பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் யோகா நிபுணர் பாபா ராம்தேவின் சிபாரிசில் பதவிக்கு வந்திருக்கிறாராம் சாஸ்திரி.
துணைவேந்தர் தேடுதல் கமிட்டியின் பட்டியலிலேயே இவர் பெயர் இல்லை. அதையும் மீறி பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்' என்கின்றனர் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.

ஆளுநரின் திடீர் நியமனம்
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் சட்டக் கல்லூரிகளை உள்ளடக்கித் தொடங்கப்பட்டது டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். இதன் துணைவேந்தராக இருந்த வணங்காமுடியின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு நிறைவடைந்தது. இதன்பின்னர் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. 'மாணவர்களின் நலனுக்காக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவது அவசியம்' எனத் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், புனே சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் தம்ம சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால். இந்த நியமனம் அரசியல்ரீதியாக பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுக் குழு பரிந்துரை
இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், " புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது. தொடர்ச்சியான வலியுறுத்தல்களால் நீதியரசர் ஜெகதீசன் தலைமையில் தேர்வுக் குழு அமைத்தனர். இந்தக் குழுவும், முனைவர்கள் டேவிட் அம்ப்ரோஸ், பாலு, காமராஜ் ஆகியோர் பெயர்களை கவர்னருக்குப் பரிந்துரை செய்தது. இந்த மூன்று பெயர்களில் ஒன்றை ஆளுநர் டிக் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்
திடீரென சம்பந்தம் இல்லாமல் சூரிய நாராயண சாஸ்த்திரியை அழைத்து வந்துள்ளனர். 'ஆளுநருக்கே இறுதி அதிகாரம்' என்றாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஓர் அங்கமான ஏ.பி.வி.பியில் கோலோச்சிய ஒரு நபரை புறக்கடை வழியாகக் கொண்டு வருவதில் நியாயமே இல்லை" எனக் கொதித்தவர்,

ஒழுங்கு நடவடிக்கை
"புதுவை பல்கலைக்கழகத்தில் இவர் வேலை பார்த்த காலத்தில், ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார். புதுவை பல்கலைக்கழத்தில் எஸ்.எஃப்.ஐ மாணவர்களுக்கும் ஏ.பி.வி.பி மாணவர்களுக்கும் இடையில் நேரடி மோதல் நிலவுவது வழக்கம். இதில் மாணவர்களைத் தூண்டிவிட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. பாலியல்ரீதியான சில விஷயங்களிலும் இவர் பெயர் அடிபட்டது. 2006-ம் ஆண்டு சட்டப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது, ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளானாவர். 'சமஸ்கிருதத்தைவிட உலகில் சிறந்த மொழி கிடையாது' என வெளிப்படையாகப் பேசி வருபவர்.

பரிந்துரைத்த பாபா ராம்தேவ்
தமிழக ஆளுநரும் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்தான். அதன் அடிப்படையில் பாபா ராம்தேவ் துணையோடு பதவிக்கு வந்துவிட்டார். 'வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக நியமிக்கலாம்' என்பது விதியாக இருந்தாலும், தேடுதல் குழு பரிந்துரைத்த பெயர்களில் இல்லாத ஒருவரைக் கொண்டு வருவது எந்த வகையிலும் சரியானதல்ல" என்றார்.

ஆளுநர் மாளிகைக்கு புகார்கள்
"தம்ம சூரிய நாராயண சாஸ்த்திரி எந்த வகையில் நியமிக்கப்பட்டார் என்பதுதான் இப்போதைய பிரதான கேள்வியாக எழுந்துள்ளது. 'அவருடைய கல்வித் தகுதி என்ன? துணைவேந்தர் பதவிக்கு அவர் எந்த வகையில் சரியானவர்? யாருடைய சிபாரிசில் அவர் பதவிக்கு வந்தார்? தேடுதல் குழு பரிந்துரைத்த மூன்று பேரைவிடவும் இவர் தகுதியானவரா? இவரது பின்புலம் என்ன?' என்கின்ற கேள்விகளைத் தொகுத்து, ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கு சிலர் தயாராகி வருகின்றனர். புதுவை பல்கலைக்கழகத்திலும் சென்னை சட்டப் பல்கலைக்கழகத்திலும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை சம்பவங்களைத் தொகுக்கும் பணியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

பேராசிரியர்கள் கொந்தளிப்பு
தேடுதல் குழு பரிந்துரைத்த பட்டியலில் உள்ள மூன்று பேராசிரியர்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். வரக் கூடிய நாட்களில் அதன் விளைவுகளை ஆளுநர் அலுவலகம் எதிர்கொள்ளப் போகிறது" என்கின்றனர் கல்வியாளர்கள் சிலர்.












Click it and Unblock the Notifications