செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த மனிதர்.. 5 மணி நேரமாக.. கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் பிஸி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருந்த நிலையில், பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட் பெற்று வந்தனர். எல்லை பிரச்னை காரணமாக சடலத்தை எடுப்பதில் தாமதம் என தகவல் வெளியாகி உள்ளது.
மனிதம் மறத்து போய்விட்டதா என்று கேள்வி எழுகிறது. வாழ்க்கையில் எல்லோருமே வேகமாக ஓடுகிறார்கள்.. தங்களை சுற்றியுள்ள சக மனிதர்களுக்கு என்னநடந்தாலும் கண்டுகொள்ளாமல் ஓடுவதே குறிக்கோளாக இருக்கிறது. மனிதம் மெல்ல மெல்ல செத்து வருகிறது. விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவுவது இல்லை.. கண் முன்னே யாரேனும் ஆபத்தில் இருந்தால் அவர்களையும் கண்டுகொள்வது இல்லை..

எல்லோருக்கும் வேண்டும் என்று எந்த விஷயத்திலும் நினைப்பது இல்லை. தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும், தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டும் காப்பாற்றினால் போதும் என்கிற மனநிலையில், சுயநலமாக பலர் வாழ்கிறார்கள். அதற்கு உதாரணமாக செங்கல்பட்டு சம்பவத்தை கூறலாம்.
செங்கல்பட்டு ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்று. இங்கு இன்று காலை அனைவரும் வேக வேகமாக ரயில் டிக்கெட் வாங்கி கொண்டு ரயிலில் ஏறி சென்னைக்கு செல்ல ஆர்வமாக இருந்தனர். சென்னையில் ஆபிஸுக்கு வேலைக்கு போகும் பிஸியில் தங்களை சுற்றி நடப்பதை பலரும் கண்டுகொள்ளவில்லை..
செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்து கிடந்தார். அவர் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் பலர் நினைத்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவர் அவர் அருகில் போய் பார்த்த போது தான் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது பற்றி ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறைக்கு தகவல் அளித்தும் 5 மணிநேரமாக சடலம் மீட்கப்படாமல் அந்த இடத்திலேயே இருந்திருக்கிறது. ரயில்வே மற்றும் நகர காவல்துறைக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னை காரணமாக சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, முன்பதிவு மையத்தில் ஒருவர் உயிரிழந்ததை அறியாத பயணிகள் பலர் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெறும் காட்சி ட்விட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சகமனிதன் துயரில் இருக்கும் போது அதை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது எவ்வளவு மனிதநேய மற்ற செயல் என்று ட்விட்டரில் பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இதற்கு காரணம் மது !!! ஏனென்றால் மக்களின் எண்ணம் என்ன என்றால் அவர் மது போதையில் உறங்குகின்றார் என்ற எண்ணத்தில் அவர்கள் இருப்பர் அதனால்தான் அங்கு வந்தவர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை ஆனால் இதை(இரயில்வே துறை இதற்கு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "அட பாவிங்களா, மக்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் போய் விட்டது. இவருக்காக இவர் வீட்டில் பெற்றோர், மனைவி, பிள்ளைகள்,சகோதர சகோதரிகள் என பலர் காத்துகொண்டிருக்க வாய்ப்பு இருக்கு. இவரது உடல் பல மணிநேரமா இப்படி இருக்கும் இந்த படத்தை பார்த்தல் அவர்களது வலி இரட்டிப்பு ஆகும்".
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இப்படிக் கூட நடக்குதா?! என்ன தான் பிரச்சினை என்றாலும் ஏனிப்படி செய்ய வேண்டும்? உறவுகளுக்குத் தகவல் சொல்வார்களா, இல்லையா? முதலில் ஹாஸ்பிடலுக்குத் தானே கொண்டு போவாங்க.! அதையாவது செய்யலாமே? ஒரு மனித உயிரின் மதிப்பு மிக நல்லாவேத் தெரியுது? உயிரோடு இருந்து நடமாடும் வரைதான் எல்லாமே போல?!" என்று வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
செங்கல்பட்டு நகர போலீசார் - ரயில்வே போலீசாருக்கு இடையே உள்ள எல்லை பிரச்னை காரணமாக சடலத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications