மு.க.அழகிரி இல்லாத முதல் திமுக மாநாடு..!
திருச்சி: மு.க.அழகிரி இல்லாமல் முதல் திமுக மாநில மாநாடு திருச்சியில் நடந்து கொண்டுள்ளது. அழகிரியும், அவரது ஆதரவாளர்களும், தங்களுக்குப் பக்கத்தில் தடபுடலாக நடந்து கொண்டுள்ள மாநாட்டை மெளனமாக இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த திமுக மாநில மாநாடுகள் எதிலுமே அழகிரி பங்கேற்காமல் இருந்ததில்லை என்கிறார்கள். ஆனால் தற்போதுதான் முதல் முறையாக திருச்சி மாநாட்டில் அவரது தடத்தையே காணோம்.
அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு சஸ்பெண்ட் ஆகி விட்டதால் அவர்களை இந்த மாநாட்டில் பார்க்க முடியவில்லை. அழகிரி ஆதரவு முன்னாள் அமைச்சர் நெப்போலியனையும் கூட பார்க்க முடியவில்லை.

எங்கெங்கும் உற்சாகம்
திருச்சியே கிடுகிடுத்துப் போய்க் கிடக்கிறது - திமுக மாநாட்டால். எங்கு பார்த்தாலும் திமுக கொடிகள்தான்.

அழகிரி இல்லை
ஆனால் மாநாட்டில் மு.க.அழகிரி இல்லை. அவரது ஆதரவாளர்கள் இல்லை. முழுக்க முழுக்க இது ஸ்டாலினை தூக்கி நிறுத்தும்படியான மாநாடாகவே காட்சி தருகிறது.

முதல் மாநாடு
அழகிரி இதுவரை நடந்த திமுக மாநில மாநாடுகளில் எப்படியாவது தலை காட்டியிருப்பார். முதல் நாள் வராவிட்டாலும் கடைசி நாளிலாவது வந்து விடுவார். அவரது ஆதரவாளர்களும் ஆஜராகி விடுவார்கள். ஆனால் இந்த முறை அழகிரியும் இல்லை, அவரது ஆதரவு அலையும் இல்லை.

பெரும் திரளான கூட்டம்
நேற்றும் பெரும் கூட்டம் மாநாட்டுக்குத் திரண்டது. இன்றும் பல லட்சம் பேர் குவிந்துள்ளனர்.

அடியோடு ஸ்தம்பித்த போக்குவரத்து
திருச்சியில் மாநாடு நடைபெறும் பிராட்டியூர் பகுதியில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் குவிந்துள்ளன. பஸ் நிலையப் பகுதி முதல் கருமண்டபம் வழியாக திண்டுக்கல் சாலையில் மாநாடு நடைபெறும் திடல் வரை போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்துள்ளது.

பைபாஸ் சாலைகளும் திணறுகின்றன
மேலும் திருச்சி - மதுரை சாலை, சென்னை செல்லும் பைபாஸ் சாலை ஆகியவற்றிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பழநி, தேனி, போடி, கம்பம் செல்லும் வழிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மதுரையிலிருந்து 500 வாகனங்களில்
அழகிரியின் கோட்டையாக கருதப்படும் மதுரையிலிருந்து 500 வாகனங்களில் திமுகவினர் கிளம்பி வந்துள்ளனர். இவர்கள் மொத்தமாக கிளம்பி வந்ததால், வரும் வழியெல்லாம் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்ததாம்.

எல்சிடி திரைகள்
நிகழ்ச்சிகளை தொண்டர்கள் சிரமமின்றி கண்டுகளிக்கும் வகையில் மாநாட்டு திடலில் 30 எல்இடி திரை அமைக்கப்பட்டிருந்தன.

ஹோட்டல்களில் ரூம் இல்லை
திருச்சி முழுவதும் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் திமுகவினர் அறைகளைப் போட்டு விட்டதால் எந்த ஹோட்டலிலும் ரூம் கிடையாது.

போலீஸைக் காணோமே...
போதிய அளவில் போக்குவரத்துப் போலீஸார் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து ஜாம் ஆகி மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.

போலீஸாக மாறிய தொண்டர்கள்
போக்குவரத்துப் போலீஸார் பெரிய அளவில் இல்லை என்பதை உணர்ந்த திமுக தொண்டர் அணியினரே, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் இறங்கி வாகனங்கள் சரியாக செல்லவும், மக்களுக்கு சிரமத்தைக் குறைக்கும் பணியிலும் ஈடுபட்டதைக் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications