பெரம்பலூரில் இயற்கை முறை பிரசவம் என விபரீதம் செய்த விஜயவர்மன்.. தாயும் சேயும் பலி!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்தனர். சுயசார்பு வாழ்க்கை என்று கூறி வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வசித்து வருபவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள். இவர் பிஎஸ்சி நர்சிங் படித்தவர். இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்நிலையில், விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்கு பஞ்சர் மருத்துவம் பார்த்து வருகிறார். அவர் அழகம்மாளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார், அதற்கு அழகம்மாளும், அவரது பெற்றோரும் சம்மதித்தார்களாம்.

தீங்கு வரும் என்று நினைப்பு
தங்கள் மகள் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொடுக்கப்படும் மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் நினைத்து இருக்கிறார்கள். இதனால், இயற்கை முறையில் பிரசவம் பார்க்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

சுகாதார அலுவலர்கள் கோரிக்கை
இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் விஜயவர்மனின் வீட்டுக்கு சென்று அழகம்மாளை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி கூறியிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் பொறுப்பில்லை
ஆனால், ''அதெலாம் எங்களுக்கு வேண்டாம், நாங்களே பார்த்துக்கிறோம் என்று விஜயவர்மனின் குடும்பம் கூறியிருக்கிறதாம்,. அத்துடன் அழகம்மாளுக்கு பிரசவம் பார்க்கும்போது அவருக்கோ, குழந்தைக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு மருத்துவர்கள் பொறுப்பில்லை என்று கைப்பட கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.

மூச்சுத்திணறல்
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அழகம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே திட்டமிட்டதன்படி அவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்திருக்கிறார்கள். அப்போது குழந்தை பாதி வெளியே வந்த நிலையில் அழகம்மாளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

உயரிழந்தார்
அத்துடன் பிரசவலியால் துடித்த, அழகம்மாளுக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

தாய் சேய் பலி
குழந்தையும் அழுகிய நிலையில் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் விஜயவர்மனின் குடும்பத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அழகம்மாளின் கர்ப்ப காலத்திலேயே சுகாதார துறை அலுவலர்கள்
பலமுறை எச்சரித்தும், விஜயவர்மனின் குடும்பம் உதாசினம் செய்தது. இதன் காரணமாக தாய் மற்றும் சேய் என இரண்டு உயிர்கள் அநியாயமாக பறிபோயுள்ளது. இந்த சம்பவம் பெரம்பலூர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications