'ஜெயலலிதா' மகள்-க்ளைம் செய்யும் ஜெயலட்சுமி- தனிக் கட்சி அறிவிப்புடன் ட்விஸ்ட் 'ஜெ.'-வின் 'அந்த டைரி'
கொடைக்கானல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தன்னை தானே அழைத்துக் கொள்ளும் ஜெயலட்சுமி என்ற பெண் அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியுள்ளதாகவும் லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் பேட்டி கொடுத்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலை அரசியல் நிகழ்வுகளால் அதிர்ந்து போயுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தி வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கொடைக்கானலில் யாத்திரை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரையின் போது காட்டெருமை உள்ளே நுழைந்து சலசலப்பானது; பின்னர் குதிரை சவாரியில் பயணித்தார்; ஆதி மக்களுடன் இணைந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக அவரது யாத்திரை இருந்தது.

ஜெயலலிதா போல மேக்கப்: அண்ணாமலை, மலையில் இருந்து கீழே சென்றுவிட்ட நிலையில் நான் ஜெயலலிதாவின் மகள் என்ற அறிவிப்புடன் ஜெயலட்சுமி என்ற பெண் இன்று கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்தார். மேடை நாடக கலைஞர்கள் ஜெயலலிதா போல மேக்கப் போட்டால் எப்படி இருக்குமோ அப்படியான கெட்டப்பில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலட்சுமி.
2 முறை "தாய்" ஜெயலலிதாவுடன் சந்திப்பு: கொடைக்கானலில் 'ஜெயலலிதா' மகள் என கூறிக் கொண்ட ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் உண்மையான மகளே நான் தான். என்னுடைய தந்தையார் தெலுங்கு நடிகர் சோபன்பாபு. பல்வேறு காரணங்களாள் 'என் தாயார்' ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. என் வாழ்க்கையில் 2 முறை 'தாய்' ஜெயலலிதாவை சந்தித்தேன். முதல்வராக இருந்த போது ஒருமுறையும் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு முறையும் சந்தித்துள்ளேன்.
ஜெ. டைரி: என் 'தாய்' ஜெயலலிதா திரைத்துறையில் பயணித்த போது எந்த வீட்டில் இருந்தோரே அந்த வீட்டில்தான் வசிக்கிறேன். அப்போது 'ஜெயலலிதா' எழுதிய டைரி ஒன்று என்னிடம் இப்போதும் உள்ளது. அவரது ஆடைகளும் என்னிடம் இருக்கின்றன. 'நான் ஜெயலலிதாவின் மகள்' (!) என வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது மரபணு பரிசோதனை உள்ளிட்ட அனைத்தையும் நீதிமன்றத்தில் தர தயாராகவே இருக்கிறேன்.
புதிய அரசியல் கட்சி தொடக்கம்: அகில இந்திய எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்கிற புதிய அரசியல் கட்சி என்னால் தொடங்கப்பட்டுள்ளது. எங்களது கட்சியின் சின்னம் இரட்டை ரோஜா. அதிமுகவின் இரட்டை சிலை சின்னம் போல, இரட்டை ரோஜா சின்னம் அமையும். கொடைக்கானலில் எங்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம். என் 'தாய்' ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்கள் இருக்கின்றன. அவர் மரணத்துக்கு 'பலர்' காரணம். இவ்வாறு ஜெயலட்சுமி என்ற பெண் பேட்டி அளித்திருக்கிறார்.
காலந்தான் எத்தனை விசித்திரமானது!












Click it and Unblock the Notifications