அமைச்சர் வைத்திலிங்கம் மீது செருப்பு வீசிய போலீஸ்காரருக்கு அடி.. கெரசின் குடித்தார்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வைத்திலிங்கத்தை பொதுமக்கள் முன்னிலையில் கேள்வி கேட்ட போலீஸ்காரரை அதிமுகவினர் அடித்து உதைத்தனர். இதனால் கோபமடைந்த அந்த போலீஸ்காரர் அமைச்சரை நோக்கி செருப்பை வீசினார். இதனால் மேலும் தாக்குதலுக்குள்ளான அவர் மனமுடைந்து மண்ணெண்ணையை குடித்து விட்டார்.
தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி. திருவோணம் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்கிறார். வெள்ளிக்கிழமை ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் தென்னமநாடு கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது அங்கிருந்த கோபி எங்க ஊர்ல ரோடு போடவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு அமைச்சர் இப்ப ஓட்டு போடுங்க அப்பறம் ரோடு போட்டு தருகிறேன் என்று பதில் சொன்னார். இந்த நிலையில் அமைச்சருடன் வந்த அதிமுகவினர் கோபியைத் தாக்கியுள்ளனர். இதனால் கோபமடைந்த கோபி, செருப்பை எடுத்து அமைச்சரை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படாமல் கீழே விழுந்து விட்டது.
இதையடுத்து அத்தனை பேர் முன்னிலையில் அதிமுகவினர் கோபியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு கோபியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யும் வேலையிலும் அமைச்சர் தரப்பு இறங்கியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கோபி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை குடித்து விட்டார்.
குடும்பத்தினர் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்த்துள்ளனர். அவர் குடும்பப் பிரச்சனையால் மண்ணெண்ணெய் குடித்து விட்டதாக கேட்போரிடம் எல்லாம் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications