சென்னையில் இருந்து போன சசிகலா ஆதரவு தீர்மானம்- நிறைவேற்ற அனைத்து மா.செ.க்களுக்கும் நெருக்கடி?
சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக மாவட்ட செயலர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை: சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் கடுமையாக நெருக்கடி தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சசிகலா தம்மை அதிமுகவின் பொதுச்செயலராக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்காக அதிமுகவின் அனைத்து பிரிவுகளிலும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முதலில் உத்தரவிடப்பட்டது. இத்தீர்மானமும் சென்னையில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு படையெடுப்பு
இதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அதிமுக பிரிவுகள் ஜெ.வுக்கு இரங்கல் தெரிவித்தும் சசிகலா தலைமை ஏற்க வலியுறுத்தியும் தீர்மானங்களை நிறைவேற்றினர். இத்தீர்மானங்களுடன் சென்னைக்கும் படையெடுத்து சசிகலாவிடம் நேரில் கொடுத்து வருகின்றனர்.

மா.செ.க்களுக்கு நெருக்கடி
தற்போது அனைத்து மாவட்ட செயலாளர்களும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதை ஏற்று தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

அதிர்ச்சியில் ஓபிஎஸ் அணி
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் எதிரி என்பதால் சசிகலாதான் முதல்வராக வேண்டும் எனவும் அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். இது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எதிர்ப்பு மா.செ.க்கள்
அதே நேரத்தில் சசிகலாவை ஏற்க மறுக்கும் மாவட்ட செயலாளர்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசனையும் நடத்தி வருகிறார்கள். அத்துடன் சசிகலா எதிர்ப்பாளர்கள் ஓபிஎஸ் அணியில் இணைவதா? அல்லது சசிகலா புஷ்பா அணியில் இணைவதா என்பது குறித்தும் விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications