தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை மே 31-க்குள் முடிக்க அதிமுக வேட்பாளர்கள் கோரிக்கை- திமுகவும் மனு!
சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலை வரும் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிமுக வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் தேர்தலை விரைவாக நடத்த கோரி திமுக வேட்பாளர்களும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் மே 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த 2 தொகுதிக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே இந்த தேர்தல்கள் ஒத்திவைப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை ஜூன் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்தது. இது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தது.
இந்த 2 தொகுதி தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை மே 27-ந் தேதிக்குள் கேட்டு முடிவெடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மே 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி, அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகிய இருவரும் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதேபோல 2 தொகுதி திமுக வேட்பாளர்களான அஞ்சுகம் பூபதி, கேசி பழனிச்சாமி ஆகியோரும் தேர்தலை விரைவாக நடத்த கோரி லக்கானியிடம் மனு அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications