For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக செயற்குழு போட்ட 14 தீர்மானங்கள்.. பெரும்பாலானாவை "அம்மா"வைப் புகழ்ந்து!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தன்னுடைய உழைப்பால், மதிநுட்பத்தால், தன்னலமற்ற வாழ்க்கை முறையால், தொட்டதெல்லாம் துலங்கும் வண்ணம் எந்நாளும் வெற்றித் திருமகளாக வாழ்வில் ஒளி வீசி வரும், தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், மகத்தான மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புக்கிடையே அதிமுகவின் செயற்குழு இன்று கூடியது அக்கட்சியின் பொது செயலரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.

ADMK EC meet hails Jayalalitha

சரியான புதன் ஹோரை 11 மணிக்கு தொடங்க தலைமை அலுவலகத்திற்கு வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவருடன் சசிகலாவும் வந்திருந்தார் .

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்து மாடியில் நின்று ஜெயலலிதா அசைத்தார். அப்போது தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சத்தீவை மீட்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வழக்கம் போல ஜெயலலிதாவின் ராசி எண் படி 5 வரும் வகையில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஜெயலலிதாவை பாராட்டிதான் பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*2016, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, இந்திய வரலாற்றில் இணையில்லா மக்கள் தலைவராக 6-ஆவது முறையாய் முதலமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குப் பாராட்டும், வாழ்த்தும்!

*எல்லையில்லாத கருணை; இணையில்லாத தாயன்பு; அளவற்ற ஆற்றல்; அனைத்திற்கும் மேலாக தன்னுடைய இந்த குண நலன்கள் அனைத்தையும் பிறர் நலனுக்காக அர்ப்பணிக்கும் தியாக உள்ளம்; வாழ்வையே தவமாக மாற்றிக் கொண்ட புனிதப் பயணம் என்று எத்தனை மாண்புக்குரிய சொற்களால் விவரிக்க முயன்றாலும் அவற்றையும் விஞ்சி நிற்கும் உயர்ந்த பண்பு நலன்கள் பல அமையப் நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் ஜெயலலிதா.

*தன்னுடைய உழைப்பால், மதிநுட்பத்தால், தன்னலமற்ற வாழ்க்கை முறையால், தொட்டதெல்லாம் துலங்கும் வண்ணம் எந்நாளும் வெற்றித் திருமகளாக வாழ்வில் ஒளி வீசி வரும், தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 2016 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாடே மகிழ்ந்து கொண்டாடும் வகையில் 6ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.

*அவரது தன்னலமற்ற வாழ்வுக்கும்; அவர்களது தலைமையிலான அரசு கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களுக்காக செயல்படுத்திய பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்கும் வாக்காளப் பெருமக்கள் அளித்த அங்கீகாரமும், நற்சான்றும் தான் இந்தத் தேர்தல் வெற்றி.

*மகத்தான மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை இந்தச் செயற்குழு தனது உளமார்ந்த பாராட்டுகளை நெஞ்சம் நெகிழ தெரிவித்து மகிழ்கிறது என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

*தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் வழங்கிடும் வகையில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியை அதிமுக பெற்றுத் தந்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று ஆட்சியில் தொடரும் சாதனையை படைத்திருக்கிறது.

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நிகழ்த்தி இருக்கும் இந்தச் சாதனை முற்றிலும் நம் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆற்றல் மிகு தலைமையின் அயரா உழைப்பு காரணமாக விளைந்திட்ட ஒன்றே ஆகும்.

*தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுகின்ற வகையில் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி தமிழக வாக்காளர்களின் பேராதரவை கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெற்றதன் காரணமாகவே, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, ஒரு கட்சி கூட்டணி எதுவும் அமைத்திடாமல், தேர்தல் களத்தில் ஒரே சின்னத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, தொடர் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை அடைவதற்கு தன்னுடைய அனைத்து ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தி ஜெயலலிதா உழைத்ததை இந்த நாடு நன்கு அறியும்.

*தன்னையே வருத்திக் கொண்டு இரவும் பகலும் தேர்தல் பணிகளை திட்டமிட்டு, அந்தப் பணிகள் செயல்படுத்தப்படும் விதத்தை மேற்பார்வையிட்டு, நிலைமைக்கு ஏற்ப வியூகங்களைத் தொடர்ந்து மாற்றி அமைத்து, எதிர்ப்போரின் எண்ணிக்கை ஏராளமாக இருந்த போதும் தன்னந் தனியாக அவர்கள் அனைவரையும் வீழ்த்தும் வண்ணம் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, ஆணித் தரமான தேர்தல் பிரச்சார உரைகளை நிகழ்த்தி, மக்கள் மனங்களைக் கவர்ந்து, மகத்தான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்திருக்கும் கழக பொதுச் செயலாளர், ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

*ஜெயலலிதாவின் தலைமை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்திட்ட இறை அருள். ஜெயலலிதாவின் கீழ் பணியாற்ற கிடைத்திட்ட வாய்ப்பு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பெற்ற வரம். தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் வழங்கிடும் வகையில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்த முதல்வர் ஜெயலலிதாஅவர்களுக்கு இந்த செயற்குழு நன்றி தெரிவித்து வணங்குகிறது.

*குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்தற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல் நிலுவையிலுள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

*மீனவர் பிரச்சனையை மத்திய அரசு உடனடியாக தீர்க்க வலியுறுத்தல், முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

*நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக தொடங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

*உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு அளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், தமிழக வளர்ச்சிக்கு பிரதமரிடம் கோரிக்கை வைத்ததற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

English summary
ADMK executive committee meeting today showered all praises on party chief and CM Jayalalitha. Fourteen resolutions were passed at the executive council meeting of the AIADMK today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X