கலங்கிப் போன கரூர்... ஆநிலையப்பர் கோவிலை "அம்மா" கோவிலாக மாற்றிய அதிமுக... பக்தர்கள் வேதனை!
கரூர்: கரூரில் உள்ள தொன்மையான ஆநிலையப்பர் என்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தையே அதிமுக மயமாக மாற்றி மக்களையும், பக்தர்களையும், சிவனடியார்களையும் அதிர வைத்து விட்டனர் அதிமுகவினர்.
தமிழ்நாட்டில் மையப்பகுதி என்ற பெயர் மட்டுமில்லாமல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஆன்மீகத்திலும், வரலாற்றிலும், வணிகத்திலும் சிறந்து விளங்குவது கரூர் நகரம் ஆகும்.

ஆநிலையப்பர் கோவில்
இந்த நகரில் உள்ள முக்கியமான திருக்கோவில், ஆநிலையப்பர் கோவில் என அழைக்கப்படும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலாகும். முசுகுந்த சக்ரவர்த்தி காலப்புகழ் பெற்ற இந்த கோயிலானது புகழ்சோழர் காலத்தில் இருந்து சிறப்பு வாய்ந்தது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்தநாயனார் அவர்கள் சிவனை வணங்கும் சிவபக்தர்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் மலு என்ற கொடாரி கொண்டு தட்டிக்கேட்பவரும் ஆவார்.

புகழ் சோழர் ஆட்சியின்போது
புகழ்சோழர் ஆட்சி செய்த போது சிவபக்தர் ஒருவர் சிவனுக்கு மாலை கொண்டு வந்த நிலையில் அந்த மாலையை புகழ்ச்சோழரின் பட்டத்து யானை அந்த மாலையை சின்னாபின்னமாக்கியுள்ளது.

எறிபத்த நாயனார்
இதை கேள்விப்பட்ட எறிபத்த நாயனார் அந்த யானையின் தும்பிக்கையை மலு என்னும் கோடாரி கொண்டு வெட்டினார். என்ற வரலாறும் இந்த கோயிலுக்கு உண்டு. அதனால் தான் வருடா, வருடம் அதற்காக பூக்குடலை நிகழ்ச்சியும், அந்த பட்டத்து யானையின் தும்பிக்கை வெட்டு நிகழ்ச்சியும் நாடகமாக நடத்தி காண்பிக்கப்படும்

சிவனடியார்களின் திருக்கோவில்
இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், பல நாடுகளிலிருந்தும் சிவனடியார்கள், சிவதொண்டர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுவது வழக்கம்.

அதிமுகவினரிடம் சிக்கிய சிவன்
இப்பெயர் பெற்ற சிவ ஆலயத்தில் கடந்த சில மாதங்களாக அதிமுகவினரிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடகா நீதிமன்றத்தால் தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழந்தார். அவருடைய பதவி மீண்டும் அவருக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவில்களை குத்தகைக்கு எடுக்காத குறையாக அதிமுகவினர் கையில் எடுத்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.

"அம்மா"விடம் பெயர் வாங்குவதற்காக
ஆகம விதிகளையும், ஐதீகங்களையும், கோவில் வழிபாட்டு முறையையும் கடைப்பிடிக்காமல், "அம்மா"விடம் பெயர் வாங்குவதற்காக தெய்வம் குடி இருக்கும் ஓவ்வொரு ஆலயத்திலும் தன் அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் ஆலயநிர்வாகத்திடம், ஐதீக முறை இல்லாமல் தாங்கள் இஷ்டப்படி அவர்களே தங்கள் எண்ணம் போல ஆலய முறையையே மாற்றி வருகிறார்கள்.

கரூர் மட்டும் விதி விலக்கா என்ன?
இதற்கு கரூர் மட்டும் என்ன விதி விலக்கா ? ஏற்கனவே புகழ்பெற்ற இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கரூர் மாரியம்மன் திருக்கோயிலில் முருகனுக்கு எடுக்க வேண்டிய காவடியை மாரியம்மனுக்கு எடுத்து, ஏகப்பட்ட செய்திகளுக்கும், ஆன்மீக அன்பர்கள் உள்ளத்திலும் கோபத்திற்கு உள்ளான கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தன்னுடைய பதவியை தக்க வைப்பதற்காக அம்மாவின் உண்மையான விசுவாசம் உள்ள மாணவன் என்று சொல்லிக்கொண்டு, அம்மாவை காப்பாற்றுவதாக கொண்டு நினைத்துக்கொண்டு தெய்வங்களுக்கு எதிர்மறையான ஓவ்வொரு செயலையும் செய்து கொண்டு வருகிறார்.

காற்றில் பறந்த விதிமுறைகள்
மேலும் அதே மாரியம்மன் திருக்கோயிலில் அவர் அங்கப்பிரதட்சணம் செய்யும் போது, விதிமுறைக்குப் புறம்பாக கருவறையை புகைப்படம் எடுத்தனர், டிவி கேமராவிலும் படம் பிடித்தனர். தமிழ்நாட்டில். அதுவும் முதல்வர் அளவில் பேசப்பட்ட தமிழக போக்குவரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அம்மன் பெரிதா? அம்மா பெரிதா? என்று சிந்திக்கும் அளவில் அன்றைய இளநீர் காவடி நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

அப்பனையும் விட்டு வைக்கவில்லை
அம்மனை விட்டு வைக்காத அவர் ஒரு படி மேலே ஏறி அப்பாவையும் விட்டு வைக்கவில்லை. சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். ஆன்மீக அன்பர்களுக்கு தெரியாத விஷயம் எதுவும் கிடையாது. எந்த ஒரு சிவ ஆலயத்திலும், அதாவது தனிப்பட்ட நபருக்கு அல்லது நோய் வாய்ப்பட்டவருக்கு அல்லது துன்பத்தில் இருப்பவருக்கு, இன்னும் சற்று சொல்லப்போனால் சனித்திசை நடப்பவருக்கு அவருடைய பெயரில், அர்ச்சனை செய்வது அல்லது ஹோமங்கள் செய்வது என்று அவரவர் வசதிக்கேற்றவாறு செய்வார்கள்.

முகம் சுளித்த மக்கள்
அதுவும் இந்து சமய அறநிலையத்துறையின் வசம் உள்ள ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் ஏற்கனவே பல முறை கருவறையை படம் எடுப்பது. உள்ளூர் தொலைக்காட்சிகளில் காண்பிப்பது. ஆலய வழிபாடு என்ற பெயரில் சிவ பக்தர்களை முகம் சுழிக்கும் வகையில் இவர்களே அ.தி.மு.க விற்கு சொந்தமான கோயில் போல் நடந்து கொண்டு வருகிறார்கள்.

1 லட்சம் தீபங்கள்
ஜெயலலிதாவை காப்பாற்றுவதாக கூறி லலிதா திருட்சதை ஹோமம் என்னும் 1 லட்சத்து 8 எண்ணை தீபங்கள் ஏற்றப்பட்டது. முழுக்க முழுக்க போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்மா என்ற பெயரிலே பல பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் சிவனைத்தவிர எந்த ஒரு தனி மனிதனையும் கடவுளுக்கு இணையாக எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. ஆனால் அந்த விதியை மீறி அம்மா என்ற பெயரில் தீபம் ஏற்றப்பட்டது.

புகை மண்டலமாக மாறிய கோவில்
தீயணைப்பு படையினர் ஒப்புக்கு சப்பாக வெளியில் தான் நின்று கொண்டிருந்தார்கள் எனபது குறிப்பிடத்தக்கது. ஒரு மாவட்ட நிர்வாகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பியை தவிர அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த தீபம் நிகழ்ச்சியில் தீபங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து எரிந்ததால் அங்காங்கே புகை மண்டலமாக காட்சி தந்த இந்த தீப வழிபாட்டில் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எரியாமல் இருந்த தீபங்கள்
ஆங்காங்கே தீபங்கள் எரியாமல் நின்றது. மேலும் வழக்கமாக கோவிலில் ஒரு விளக்கிற்கு ரூ 2 என வசூலிக்கப்படும். இந்த விளக்கு தீபத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. விளக்கிற்காக இங்கு விதிகள் முற்றிலும் மாற்றப்பட்டது.

மக்கள் வெறுத்தனர்
சனிக்கிழமை மாலையில் சனிபகவானுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எள் தீபம் ஏற்ற வருவது வழக்கமான நிலையில், நேற்று ஆநிலையப்பர் திருக்கோயிலை அம்மா கோயிலாக மாற்றிவிட்டார்களோ என்று நினைத்து வந்தவர்கள் அனைவரும் முகம்சுளித்து கோயிலுக்குள் செல்லாமல் வேறு கோயிலுக்கு திரும்பிச் சென்றனர்.

கோபத்தில் சிவனடியார்கள்
சிவன் வழிபாட்டையும், சிவ பக்தர்களையும் அவமானப்படுத்தியதற்காக எறிபத்த நாயனார் வாழும் இடமான இந்த பிரதான கோயிலில் நடந்த இந்த செயல், சிவபக்தர்களையும், சிவனடியார்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனியே கோவில் கட்டி செய்யட்டுமே
அரசியல் செய்ய நினைக்கும் இவர்கள் மாநாடு பொதுக்கூட்டம் போட்டால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் எப்படி நகருக்கு வெளியே பிரமாண்டமாக பல லட்சம் செலவில் மேடை அமைத்து செய்வார்களோ அது போன்று தெய்வ விஷயங்களிலும், தெய்வ வழிபாட்டையும் தயவு கூர்ந்து தனியாக ஒரு கோயில் கட்டி அதில் என்ன வேண்டுமோ அதை செய்யட்டும் என்று சமூக நல ஆர்வலர்களும், பக்தர்களும், சிவனடியார்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுத்தம் செய்வது யார்
மேலும் இந்த விளக்கு பூஜையினால் அசுத்தமான கோவில் வளாகத்தை சுத்தம் செய்யப் போவது யார்.. அதிமுகவினரா அல்லது இந்து சமய அறநிலையத்துறையினரா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிந்றனர். இது வரை இந்த மாதிரியான விஷயம் இக்கோயிலில் நடைபெற்றது இல்லை என்பது ஆன்றோர்களின், சான்றோர்களின் கருத்தாகும்.
இந்த அம்மா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் லோக்சபா துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications