ஸ்ரீரங்கத்தில் ஜெயிக்கணும்... ஆனா 'அம்மா'வை முந்திடக்கூடாது... இது அதிமுகவினரின் அவஸ்தை!!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எதிர்கட்சியினரை டெபாசிட் இழக்கச் செய்து வெற்றி பெற வேண்டும் என்று பகீரத முயற்சி செய்யும் அதிமுகவினர், வளர்மதியின் வாக்கு ஜெயலலிதா வாங்கியதை விட அதிகமாகிவிடக்கூடாதே என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா, தனது எம்.எல்.ஏ பதவியையும் முதல்வர் பதவியையும் பறிகொடுத்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றதால் நட்சத்திர தொகுதியாக உயர்ந்த ஸ்ரீரங்கம் தொகுதி செப்டம்பர் 27ஆம் தேதி முதல் எம்.எல்.ஏ இன்றி காலியாக இருந்தது.
இதனையடுத்து இந்த தொகுதிக்கு பிப்ரவரி 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆன்மீக நகரம்
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக வைணவர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம், இடைத்தேர்தல் அறிவிப்பினால் அனலாக தகிக்கிறது. அதிமுக வேட்பாளராக வளர்மதியும், திமுக வேட்பாளராக ஆனந்தும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

உள்ளே போன ஜெ
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அன்று போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றவர்தான், இதுவரை அவர் வெளியில் வரவில்லை. அதனால் பிரசாரத்திற்கும் ஜெயலலிதா வரமாட்டார் என்பதை வளர்மதியை அவர் வாழ்த்தியதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். ஜெயலலிதா பிரசாரம் செய்யவராமல், ஒரு இடைத்தேர்தல் நடப்பது இதுதான் முதன்முறை.

தனக்குத் தானே
ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்றோ, வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது என்றோ, எந்தக் கட்டுப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஆனால், தனக்குத்தானே அந்தக் கட்டுப்பாட்டை ஜெயலலிதா விதித்துக்கொண்டார்.

எல்லாம் பயம்தான்
அதற்கான காரணம் இல்லாமல் இல்லை. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியில் வந்திருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா, தேர்தல் பிரசாரம் செய்ததால் அவரது ஜாமீன் மனுவை ரத்துசெய்தது உச்ச நீதிமன்றம். அதுபோன்ற சூழ்நிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் பயம்.

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்
அனைத்துக் கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை சாதாரண இடைத்தேர்தலாகப் பார்க்கவில்லை. அடுத்து வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாகத்தான் பார்க்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் எடுக்கும் முடிவுதான் அடுத்த சட்டசபை தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் எனவும் நினைக்கிறார்கள்!

விடுதலையானால்?
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நீதிபதி குமாரசாமியின் கேள்விகள் தனக்கு சாதகமாக இருப்பதாகவே ஜெயலலிதா நம்புகிறார். வழக்கின் தீர்ப்பு ஒருவேளை சாதகமாக வந்தால், ஜெயலலிதா மீண்டும் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவார். அது இடைத்தேர்தலாக இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகச் சட்டசபைக்கான பொதுத்தேர்தலாகக்கூட அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆளுங்கட்சிக்கு சாதகம்
பெங்களூரு வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து தமிழகச் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் தேதியும் முடிவாகிவிடும். நிரபராதி என விடுவிக்கப்பட்டால் அதுவே ஜெயல்லிதாவுக்கு ஆதரவாக வாக்குகளை அள்ளிக்குவித்து விடும். எனவேதான், எதிலுமே மாட்டிக்கொள்ளக் கூடாது என எதிர்க்கட்சிகள் அனைத்தும் பதுங்குகின்றன. இது ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளது.

ஜெயிக்கணும்… ஆனால்…
ஸ்ரீரங்கத்தில் அதிமுகதான் ஜெயிக்கும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. வாக்கு வித்தியாசம்தான் கொஞ்சம் வழுக்கலை ஏற்படுத்துகிறது அமைச்சர்களுக்கு. இது அம்மா தொகுதி... அம்மாவை விட அதிகமாக வளர்மதி ஓட்டு வாங்கிவிட்டால் என்ன செய்வது என்றுதான் கையை பிசைகின்றனர். ஜெயிக்கணும்... ஆனால் அம்மாவை முந்தக்கூடாது. இது எப்படி அமைச்சர்கள், அதிமுகவினரை அவஸ்தையில் தள்ளியுள்ளது இந்த டார்கெட்.












Click it and Unblock the Notifications