திமுக மாவட்டச் செயலாளர் அரசு நிகழ்ச்சிகளில் எப்படி பங்கேற்கலாம்? அதிமுக கூட்டிய புது பஞ்சாயத்து!
சேலம்: அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தங்கும் அனுமதியை சேலம் மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதிக்கு யார் கொடுத்தது என அதிமுக புது பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், வழக்கறிஞருமான இன்பதுரை, தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
மேலும், செல்வகணபதியை ஏன் அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க அனுமதிக்கக் கூடாது, அவர் மீதான வழக்கு பின்னணி என்ன என்பது பற்றி தலைமைச் செயலாளருக்கு இன்பதுரை எழுதிய கடிதம் வருமாறு;

''சேலம் மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, அரசு சார்பில் நடைபெறும் பணிகள் துவக்க விழாக்களில் கலந்து கொண்டு தலைமை வகிப்பதுடன், பூமி பூஜை மற்றும் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தும் வருவதை நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்தேன்.
கடந்த ஜூலை 15ஆம் தேதியன்று இடங்கணசாலை நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை, எடப்பாடி நகராட்சி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம், கொங்கனாபுரம் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி, கொங்கனாபுரம் ஒன்றியத்தில் வாரச் சந்தை மற்றும் அங்கன்வாடி திறப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் செல்வகணபதி அரசு நிதியில் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசுப் பணிகளை பூமி பூஜை செய்தும், அடிக்கல் நாட்டியும், தலைமை தாங்கியும் துவக்கி வைத்துள்ளார்.
செல்வகணபதி தற்போது அமைச்சராகவோ அல்லது சட்டபான்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, உள்ளாட்சி பிரதிநிதியாகவோ அல்லது அரசு பதவி வகிப்பவராகவோ இல்லை. மேலும் அவர் நீதிமன்றத்தால் சி.பி.ஐ. வழக்கு ஒன்றில் (C.C. 25 of 2001, On the file of tX Addl. Special Judge for CBI Cases) சிறைத் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் உள்ளவர். இந்த வழக்கின் காரணமாக அவர் ஏற்கனவே வகித்து வந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை லில்லி தாமஸ் Vs. இந்திய அரசு என்ற வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழிகாட்டுதலின் படியும் Section 8 (3) of RP Act, 1951ன் படியும் பதவி இழந்தவர்.

இந்த வழக்கில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து (Crl. Appl. No.233 of 2014) தற்பொழுது ஜாமீனில்தான் அவர் வெளியில் உள்ளார். மேலும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் இது போன்று அரசு நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கவோ, பணிகளை துவக்கி வைக்கவோ சட்டப்படி தகுதியற்றவர் ஆவார்.
எனவே, சட்டத்திற்கு புறம்பாகவும், உச்ச நீதிமன்றம் வகுத்து தந்துள்ள நெறிமுறைகளுக்கு முரணாகவும் செல்வகணபதி அவர்கள் எந்த அடிப்படையில் இந்நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கவும் பணிகளை துவக்கி வைக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டார் ? என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு இன்பதுரை தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications