சசி, டிடிவிக்கு பக்கபலமாக இருப்போம்.. ஓ.பி.எஸ் கோஷ்டியை சீண்டிய தினகரன் கோஷ்டி நமது எம்ஜிஆர்!
தீயசக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து சசிகலா, தினகரனுக்கு பக்கபலமாக நிற்போம் என்று அதிமுக நாளேடான நமது எம்ஜிஆர் கருத்து வெளியிட்டுள்ளது.
சென்னை : அதிமுகவின் இரு அணி இணைப்புக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் சசிகலா, தினகரனை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி விட்டதாக அதிமுக அம்மா அணி அறிவித்த நிலையில் அந்த அணியும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கான நடவடிக்கைகள் இறங்கியுள்ளன.
இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட தலா 7 பேர் கொண்ட குழு இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று எங்கு எத்தனை மணிக்கு பேச்சுவார்த்தை என்பதில் இரு அணியுமே மௌனம் காத்து வருகின்றன.

சதியை முறியடிப்போம்
இந்நிலையில் அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் சசிகலா , தினகரனை ஆதரித்தே செய்தி வெளியிட்டுள்ளது. தீயசக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து சசிகலா, தினகரனுக்கு தோளோடு தோள் நிற்போம் என்று முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாகவே வெளியிட்டுள்ளது.

ஜெ. பாதையில் சசி
எதற்கும் அஞ்சாமல் கட்சியை வழிநடத்தும் வல்லமை பெற்றவர் பொதுச் செயலாளர் சசிகலா என்றும், ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு வழிகாட்ட ஜெயலலிதா பாதையில் பொதுச் செயலாளர் சசிகலாவின் கட்டளையை ஏற்று கட்சி பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இளம் தலைவர்தான் துணை பொதுச்செயலாளர் தினகரன் என்றும் கூறியுள்ளது.

சதி நிறைவேறாது
தினகரனின் கழக பணிகளின் வேகத்தை கண்டு நம் எதிரிகளும், துரோகிகளும் சூழ்ச்சி வலை பின்னி பொய் மற்றும் ஜோடிக் கப்பட்ட வழக்குகளை தொடர்ந்து அவர் மீது களங்கம் கற்பித்து அரசியலில் இருந்து அகற்றி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். எதிரிகளின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

தோள் நிற்போம்
சசிகலாவும், தினகரனும் தான் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். அவர்களால் மட்டுமே இவை சாத்தியமாகும் என்று தொடர்ந்து எதிரொலித்து வருகிறார்கள். அவர்களுக்கு பக்க பலமாக தோளோடு தோள் நிற்போம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைமுக ஆதரவா?
அதிமுகவிற்கும் சசிகலா குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிமுக அம்மா கட்சியினர் கூறி வரும் நிலையில் இந்த செய்தி வெளியிட்டிருப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சசிகலா, தினகரனை விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை, அவர்களுக்கு ஆதரவாகவே இருப்பதாக தெரிகிறது என்று கட்சியினர் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications