கருணாநிதி, வைரமுத்துவை போட்டுத் தாக்கும் அதிமுக வெப்சைட்!
சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி' என்ற புத்தகத்தை நஞ்சுக்கு நீதி என்று தலைப்பு வைத்து கிண்டலடித்துள்ளனர் அதிமுக இணையதளத்தில்.
தி.மு.க. தலைவர் கலைஞர் தனது அரசியல் அனுபவங்களை ‘நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள் புத்தகமாக வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் 6 வது பாகம் வெளியானது. அதனை வைரமுத்து பெற்றுக் கொண்டார். நெஞ்சுக்கு நீதி புத்தகத்தையும், கவிஞர் வைரமுத்துவையும் தாக்கி அதிமுகவின் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

குடும்ப அரசியல்
அநீதியை தனது அரசியல் வாழ்க்கையாக்கிக் கொண்டு, அட்டூழியங்களையும், அபகரிப்புகளையும், ஆக்கிரமிப்புகளையும் அன்றாட பிழைப்பாக்கிக் கொண்டு, ஊரான் பிள்ளைகள் ஓழிந்தாலும் என் பிள்ளைகள் மட்டும் உயர்ந்தாக வேண்டும் என்னும் வெறி பிடித்து அலைகின்றவர் நஞ்சுக்கு நீதி எனச் சொன்னால், அது நயமாக இருக்கும்....

துதிபாடிகள்
மனைவி, மகள், மகன், பேரன் என ஒட்டுமொத்த குடும்பத்தையே ஊழல் தூண்டிலுக்கு புழுவாக்கி, அதன் மூலம் உலகப் பணக்காரராய் உயர்ந்திருக்கும் குடும்பத்தின் தலைவனை காவியத் தலைவன் என்றும், கண்ணியவான் என்றும், பொருந்தாத சொல் கொண்டு, புகழ்மாலை சூட்டுவது வெட்கக்கேடு....

சிபிஐ விசாரணை
கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள்ளே, சி.பி.ஐ. நுழைந்து மனைவியை, மகளை, விசாரணை மேற்கொண்ட அவலம் இந்தியாவில்..... இந்திய அரசியலில் எந்தத் தலைவனுக்கும் இதுவரை ஏற்படாத இழிவு....

சிறைச்சாலை அவமானம்
தான் முட்டுத்தாங்கும் கட்சி மத்தியல் ஆட்சி நடத்தும் போதே, ஊழல் குற்றச்சாட்டில், தன் மகளையும், தன் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரையும் ஜோடியாக சிறையில் அடைத்த அவமானமும் ஆரூரார்க்கே உரியது......

விளம்பர பிரியர்
விளம்பர வெறி பிடித்த தலைவருக்கு துதி பாடிவிளம்பர குத்தகை எடுத்து காசு பணம் பார்த்த கவிஞரும் கூட்டுக் களவாணியே என்பதால், ஆரூராருக்கு அதிகாலை அலாரமாகி பள்ளி எழுச்சி பாடுகிறார்..... பணமும் பார்க்கிறார் என்பதெல்லாம் இப் பாரே அறியும். எனவே நெஞ்சுக்கு நீதி என்பதைவிட, நஞ்சுக்கு நீதி என்று கூறுவதே நல்லது என்கிற ரீதியில் எழுதியுள்ளனர்.

புரட்சி என்ற வார்த்தை
புரட்சி என்கிற பட்டம், பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவருக்கு பொருந்தும். பிறர் தயவின்றி தான் புரியும் தொண்டால் தன்னலமில்லா சேவையால் மனிதப் புனிதராம் அன்னை தெரசா தொடங்கி, உலக வல்லரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் வரை ஓடி வந்து கரம் குலுக்கி, உளமார பாராட்டும் ஒப்பில்லா உயர் தலைவராம் நம் புரட்சித்தலைவி அம்மாவுக்கும் பொருந்தும்.

யாருக்கு பொருந்தாது
ஆனால், காசும், பவிசும் கைக்கு வரும் என்றால் காட்டிக் கொடுக்கும் கோல்மால்புரக் கும்பலுக்கு எப்போதும் புரட்சி என்னும் வார்த்தை பொருந்தாது!
இந்தரீதியில் அதிமுக இணையதளத்தில் போட்டுத் தாக்கியுள்ளனர். கொஞ்சம் பழசு தான் என்றாலும்.. இந்த லிங்குகள் தொடர்ந்து பல மாதங்களாக தொடர்ந்து அதிமுக இணையத்தளத்தில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications