மழை வெள்ளத்தால் பாதிப்பு..தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்..இன்று முதல் ரூ.1000 நிவாரணம்
மயிலாடுத்துறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க ரூ.16.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் 1.61 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, விர காற்றழுத்த பகுதியாக மாறியது. இதன் காரணமாக கடந்த 11ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களை மழை சூறையாடியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், சம்பா பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர். கழுத்தளவு தண்ணீரில் குடியிருப்புகள் சிக்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

முதல்வர் நேரில் ஆறுதல்
மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுத்துறை மாவட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். மேலும் மயிலாடுத்துறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இயல்பு வாழ்க்கை முடங்கியது
இந்த அரசாணையில், ‛‛வடகிழக்கு பருவமழை 29.10.2022 அன்று தமிழகத்தில் தொடங்கியது. நவம்பர் 2வது வாரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு மழை பதிவானது. 10.11.2022 முதல் 11.11.2022 வரை 1198% அதிகப்படியான மழையைப் பதிவானது. கன மற்றும் மிக கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

கடுமையான பாதிப்பு
குறிப்பாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் 14.11.2022ல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பார்வையிட்டு ரூ.1000 நிவாரணம் அறிவித்தார். மாநில செயற்குழுவின் ஒப்புதலின்படி, அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், அவர்களின் உத்தரவில், அரசு ரூ. 16,16,47,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் ரூ.1000 நிவாரணம்
அதன்படி மழை நிவாரணத்துக்காக ரூ.16.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சீர்காழியில் 99,518, தரங்கம்பாடியில் 62,129 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 61,647 குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணத்தொகையை பொதுமக்கள் ரேஷன் கடைகளில் 24ஆம் தேதி முதல் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் இன்று முதல் ரூ.1000 வெள்ள நிவாரணம் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications