கூட்டணி அமைப்பதில் பாஜக விறுவிறு... அன்புமணியும் டெல்லி செல்கிறார்!
சென்னை: தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைப்பதில் பாரதிய ஜனதா கட்சி மும்முரம் காட்டி வருகிறது. அக் கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறுவது உறுதியான நிலையில் பாமகவிடம் இருந்தும் இதுபோன்ற அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என தெரிகிறது.
அண்மையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்று பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். இதையடுத்து, தமிழக பா.ஜனதாவுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைப்பது உறுதியானது. இதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்தவர் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.

பாமக இணைகிறது
ஏற்கெனவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை தமிழருவி மணியன் நேரில் சந்தித்து பாஜக கூட்டணியில் இணைந்து கொள்ள வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பாரதிய கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர் ராவ், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராமதாசின் மகன் அன்புமணியை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

விரைவில் அன்புமணி டெல்லி பயணம்
அனேகமாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் டெல்லி சென்று ராஜ்நாத்சிங் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து கூட்டணியில் இணைவதை உறுதி செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக நிலை என்ன?
மேலும் தே.மு.தி.க.வை பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார் தமிழருவி மணியன்.. அடுத்த மாதம் தேமுதிகவும் இது தொடர்பாக அறிவிக்கலாம் என தெரிகிறது.

சென்னையில் மெகா பிளான்
இப்படி கூட்டணிக் கட்சிகள் இடம்பெறுவது உறுதியானதும் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் சென்னை வந்து கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

மோடியுடன் ஒரு மேடையில்..
பின்னர் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெறும் பாஜகவின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் ஏறவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications